லைஃப்ஸ்டைல்
வயிற்றில் கொழுப்பு சேர்வதை தடுக்க...

வயிற்றில் கொழுப்பு சேர்வதை தடுக்க...

Published On 2020-10-14 08:39 GMT   |   Update On 2020-10-14 08:39 GMT
தொப்பை ஏற்பட உட்கார்ந்திருப்பது மட்டுமே காரணமல்ல. உடலுக்கு குறைவான வேலை கொடுக்கும்போது அது எல்லா உறுப்புகளையுமே பாதிக்கும்.
அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலை, அடிக்கடி எழுந்து போக முடியாது, தினமும் அதிக நேரம் உட்கார்ந்தபடியே இருப்பதால், தொப்பையின் அளவு அதிகரித்தபடியே இருக்கிறது. காலையில் அலுவலகத்துக்கு சீக்கிரம் செல்ல வேண்டியிருப்பதால், உடற்பயிற்சி செய்யவும் நேரமில்லை. இப்படி பல காரணங்கள் தொப்பை உருவாவதற்கு சொல்லப்படுகின்றன. தொப்பை ஏற்பட உட்கார்ந்திருப்பது மட்டுமே காரணமல்ல. உடலுக்கு குறைவான வேலை கொடுக்கும்போது அது எல்லா உறுப்புகளையுமே பாதிக்கும். அதில் தொப்பை மட்டுமே நம் கண்களுக்கு பெரிதாக தெரிகிறது.

வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வது பரம்பரை பிரச்சினையாகவும் இருக்கலாம். சோடா, காபி, மைதா, பேக்கரி உணவு வகைகள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதாலும் தொப்பை ஏற்படும். தொப்பையை குறைக்க தனியாக எந்த மருந்தும் கிடையாது. அதிக உடல் பருமனால்(120 கிலோவுக்கு மேல்) அவதிப்படுபவர்கள் வேண்டுமானால் மருத்துவர்களின் ஆலோசனையுடன் அறுவை சிகிச்சை பற்றி யோசிக்கலாம். மற்றவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக தொப்பையை குறைப்பது நல்லதல்ல.

அதைவிட அன்றாட உணவிலும், பழக்க வழக்கங்களிலும் மாற்றம் செய்தால் தொப்பையை குறைக்க முடியும். தினமும் உணவில் ஒரு கப் காய்கறி சாலட் சேர்த்துக்கொள்ள வேண்டும். தோலுடன் சாப்பிடக்கூடிய பழங்களை தோலுடன் சாப்பிடுவது உகந்தது. பழங்களின் தோல், வயிற்றில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். ஆப்பிள் போன்ற பழங்கள் பளபளப்பாக இருப்பதற்காக தோலில் மெழுகு பூசப்படும். அதனால் அவற்றை சாப்பிடுவதற்கு முன் 36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொண்ட வெதுவெதுப்பான நீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி சாப்பிடலாம்.

தினமும் ஒருமுறை கிரீன் டீ குடிப்பது, போதுமான அளவுக்கு தண்ணீர் குடிப்பது, பிராணாயாமம் செய்வதும் வயிற்று கொழுப்பை நீக்க உதவும். சாதாரண நாற்காலியில் நேராக அமர்ந்து, கைப்பிடிகளை பிடித்தபடி, கால்களை ஒரு பத்துமுறை மேலே தூக்கி, கீழிறக்க வேண்டும். இந்த பயிற்சியும் வயிற்று கொழுப்பை குறைக்கும். ஒரு நாளில், குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது நடக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் நடப்பதைவிட ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, சிறிது நேரம் இடைவெளிவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம். அதுவே, இரவில் சாப்பிட்ட பிறகு, ஒன்றரை மணி நேரம் இடைவெளிவிட்டு நடக்கலாம். இப்படி செய்தால் வயிற்றில் கொழுப்பு சேர்வதை தடுக்க முடியும்.
Tags:    

Similar News