செய்திகள்
கைது

பட்டுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் கைது

Published On 2021-09-03 11:28 GMT   |   Update On 2021-09-03 11:28 GMT
பட்டுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன பெண் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், ஆய்வாளராக பணியாற்றியவர் கலைச்செல்வி (45), தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளர்கள் அருண், அந்தோணி யாகப்பா இருவரும், தங்களது நிறுவனத்தில் இருந்து புதிதாக விற்பனை செய்து, பதிவு செய்த லோடு ஆட்டோவுக்கு 2,500 ரூபாயும், ஏற்கனவே பதிவு செய்து 2 வாகனங்களுக்கான ஆர்.சி., புக் 2 ஆயிரம் ரூபாய் என 4,500 ரூபாயை லஞ்சமாக புரோக்கர் கார்த்திகேயன் மூலம் கலைச்செல்வி கேட்டதாக தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பெயரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வியாழக்கிழமை பட்டுக்கோட்டை போக்குவரத்து வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மறைந்திருந்தனர். அப்போது 4,500 ரூபாய் பணத்தில் ரசாயன பவுடர் தடவி அருண் மற்றும் அந்தோணி யாகப்பா இருவரும் புரோக்கர் கார்த்திகேயனிடம் வழங்கினர்.

அந்த பணத்தை கார்த்திகேயன் கலைச்செல்வியிடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News