குழந்தை பராமரிப்பு
வீட்டுக்கல்வி

வீட்டுக்கல்வி ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றம்

Published On 2022-03-01 07:30 GMT   |   Update On 2022-03-01 07:30 GMT
தேர்வுகள் அல்லது பாடத்திட்டம் பற்றி அழுத்தம் கொடுக்காதீர்கள். கற்றலை வேடிக்கையாக கையாள்வதற்கு அனுமதியுங்கள். சுதந்திரமாக கற்றுக்கொள்வதற்கு வழிகாட்டுங்கள்.
கொரோனா அச்சுறுத்தலால் நேரடி பள்ளிப்படிப்பு முடங்கி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் கற்றல் முறைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டானது. பள்ளிக்கூடமே செல்லாமல் வீட்டில் இருந்தபடியே படிக்கும் வீட்டுக்கல்வி முறை நடைமுறையில் இருந்தாலும் கொரோனா காலகட்டம் அதன் மீதும் கவனம் திரும்ப வைத்திருக்கிறது.

வீட்டுக்கல்வி மூலம் படித்த குழந்தைகளும் வெற்றிகரமான வாழ்க்கைக்குள் நுழைவார்கள் என்பதற்கு தன் பிள்ளைகளை முன்னுதாரணமாக காட்டுகிறார், ஜூன் மெண்டெஸ். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் ஆசிரியராக பணி புரிந்தவர். தனது மூன்று குழந்தைகளுக்கும் வீட்டுக்கல்வி மூலமே பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அந்த படிப்பும் அவர் களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல வைத்திருக்கிறது.

‘‘நான் 2010-ம் ஆண்டு வரை ஆசிரியையாக பணிபுரிந்தேன். நான் ஆங்கில ஆசிரியை. அதனால் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால் குழந்தைகளுக்கு வீட்டுக்கல்வி கற்றுக்கொடுக்க முடிவு செய்ததும் அவைகளையும் கற்றுக்கொண்டேன். நான் ஆசிரியையாக இருந்ததால் வீட்டுக்கல்வி எளிதாகிவிட்டது’’ என்கிறார்.

ஜூன் மெண்டெஸ், பிள்ளைகளுக்கு வீட்டுக்கல்வி கற்றுக்கொடுக்க முடிவு செய்தபோது மூத்த மகள் செஸ்ட்லாவி 6-ம் வகுப்பும், மகன் ஜீயஸ் 5-ம் வகுப்பும், இளைய மகள் டென்சின் 2-ம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தார்கள். தான் ஆசிரியை என்பதற்காக வீட்டுக்கல்வியை தேர்ந்தெடுக்கவில்லை என்றும் சொல்கிறார்.

"நான் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்தேன். அங்கு நான் கற்றுக்கொண்ட அனுபவங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அந்த தருணங்கள் மறக்க முடியாதவை. அதே போன்ற பின்னணி கொண்ட வீட்டுக்கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பியதும் இல்லை. என் கணவர்தான் இந்த யோசனையை முன்வைத்தார்.

ஆனாலும் இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க நான் தயாராக இருப்பதாக நினைக்கவில்லை. அதேவேளையில் என் குழந்தை களுக்கு கற்றலின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி குறைய தொடங்கியது. அவர்கள் மெல்ல மெல்ல தனித்துவத்தை இழந்து வருவதை கவனித்தேன். பள்ளியிலும் வீட்டிலும் படிப்புக்கு அதிக நேரம் செலவிட்டனர். அவர்கள் விரும்பிய விஷயங்களை செய்வதற்கும், மகிழ்ச்சியாக பொழுதை போக்குவதற்கும் போதுமான நேரம் கிடைக்கவில்லை.

``என் பிள்ளைகள் வகுப்பில் முதலிடம் பெற வேண்டும், அவர்களின் வேலையை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்று எண்ணும் சராசரி பெற்றோராக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என் மகள்கள் அதிகாலையில் எழுந்து மன அழுத்தத்தோடு வீட்டு பாடங்களை முடிப்பதை பார்த்ததும் மாற்று திட்டம் பற்றி ஆலோசித்தேன். இறுதியில் வீட்டுக் கல்விதான் சிறந்த தேர்வாக அமையும் என்று முடிவு செய்தேன்’’ என்கிறார்.

ஆரம்பத்தில் வீட்டுக்கல்விக்கான அட்ட வணையை தயாரித்து அதன்படி செயல்படுவதற்கு பிள்ளைகளை பழக்கி இருக்கிறார். அதுவும் ஒரு வகையில் நிர்பந்தப்படுத்தி படிக்க வைக்கும் சூழலை உருவாக்கியதால் அவர் களின் விருப்பப்படி செயல்பட அனுமதித்திருக்கிறார். அது அவர்களின் கற்றல் திறனை மெருகேற்றுவதற்கு உதவி இருக்கிறது. புத்தக படிப்போடு, விதவிதமான இசைக்கருவிகளை வாசிப்பது முதல் ஓவியம் வரைவது வரை பல்வேறு தனித்திறன்களை வளர்த்திருக்கிறார்கள்.

எந்த விஷயத்திலும் மற்றவர்களை சார்ந்திருக்காமல் சுயமாகவே முடிவெடுத்து செயல்படும் திறனையும் வளர்த்துக்கொண்டிருக் கிறார்கள்.

வீட்டுக்கல்வி மீது நாட்டம் கொண்டவர்களுக்கு ஜூன் மெண்டிஸ் வழங்கும் அறிவுரைகள்:

* ஆரம்பத்தில் எந்த விஷயமும் சுமுகமாக இருக்காது. உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள். அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

* சிந்தித்து செயல்படுவதற்கு பிள்ளைகளை அனுமதியுங்கள். பல வழிகளை தேர்ந் தெடுப்பதற்கும் ஊக்கப்படுத்துங்கள். இறுதியில் அதில் சிறந்ததை தேர்வு செய்து முன்னோக்கி செல்லும் பாதையை கண்டுபிடிப்பார்கள்.

* தேர்வுகள் அல்லது பாடத்திட்டம் பற்றி அழுத்தம் கொடுக்காதீர்கள். கற்றலை வேடிக்கையாக கையாள்வதற்கு அனுமதியுங்கள். சுதந்திரமாக கற்றுக்கொள்வதற்கு வழிகாட்டுங்கள்.

* எதையும் மிகைப்படுத்தாதீர்கள். ஏதாவதொரு இலக்கை நிர்ணயித்தால் அதனை நோக்கி செயல்படுவதற்கு வழிகாட்டுங்கள். அவர்களுக்கு நீங்கள் முன் மாதிரியாக இருங்கள்.

* குழந்தைகள் சிறப்பாக செயல்பட்டால் பரிசு அளித்து ஊக்கப்படுத்துவதற்கு மறக்காதீர்கள்.

* ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டவர்கள். அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுங்கள்.
Tags:    

Similar News