ஆன்மிகம்
சாமி, அம்பாள் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் புறப்பட்ட காட்சி.

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை கைலாசகிரி மலைக்கு கிரிவலம்

Published On 2021-03-16 04:51 GMT   |   Update On 2021-03-16 04:51 GMT
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 10-வது நாளில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் சென்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் இருவேளை வாகன வீதிஉலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் பங்கேற்று ஆதி தம்பதியர்களான சிவன்-பார்வதியை வாழ்த்த வந்த கைலாசகிரி மலையில் வீற்றிருக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ேநற்று காலை உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கைலாசகிரி மலைக்கு கிரிவலம் சென்றனர்.

புதுமண தம்பதியர்களாக அலங்கரிக்கப்பட்ட சாமி, அம்பாள் ஜனதா அம்பாரி வாகனங்களில் எழுந்தருளினர். ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் வில், அம்புகள் ஏந்தியும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் புதுப்ெபண் போலவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக ேகாவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சாமி, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கோவிலில் இருந்து புறப்பட்ட கிரிவல ஊர்வலம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த பங்காரம்மன் காலனி, ராமச்சந்திராபுரம், சிவநாதபுரம், கொத்தக்கண்டிகை, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்கள் வழியாகச் சென்றது. கிராமங்களை கடந்து செல்லும்போது 16 மண்டபங்களில் சாமி, அம்பாள் சிறிது நேரம் ஓய்வெடுத்து, கிரிவலத்தைத் தொடர்ந்தனர். சகஸ்ர லிங்கேஸ்வரர் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் சாமி, அம்பாளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

கிரிவலம் சென்று, அங்கிருந்து சாமி, அம்பாள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலை நோக்கி புறப்பட்டனர். கிரிவலத்தில் பங்ேகற்க முடியாத பக்தர்கள் பலர் சிவன், அம்பாள் திரும்பி வரும்போது, வழியில் எதிர்சேவை மண்டபம் அருகில் சென்று புதுமணத் தம்பதிகளான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை வரவேற்பதுபோல் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றுக்குச் சென்று தரிசனம் செய்தனர். சொர்ணமுகி ஆற்றில் சிறுவர், சிறுமிகள், பக்தர்கள் கூடி மகிழ்ந்ததுடன் சாமி தரிசனமும் செய்தனர்.

கிரிவல ஊர்வலத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியர், ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு. மதுசூதன்ரெட்டி தம்பதியர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சாமி, அம்பாள் கோவிலை அடைந்ததும் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ேநற்று இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Tags:    

Similar News