செய்திகள்
விசைத்தறி

ஜப்தி நடவடிக்கை-விசைத்தறியாளர்கள் கவலை

Published On 2021-06-09 09:42 GMT   |   Update On 2021-06-09 09:42 GMT
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு வந்த தி.மு.க., எம்.பி., கனிமொழி, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் விசைத்தறியாளர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
பல்லடம்:

கொரோனா ஊரடங்கால் பல்லடம் விசைத்தறியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், வங்கியினர்  ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மிகவும் கவலையடைந்துள்ளனர். எனவே இதற்கு தீர்வு காண முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கம் சார்பில் அனுப்பப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 1992ம் ஆண்டு முதல் ஜவுளி உற்பத்தியாளர்களிடம், விசைத்தறியாளருக்கு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இந்த நடைமுறை 2014ம் ஆண்டு வரை நீடித்த நிலையில் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. இன்று வரை 2014ம் ஆண்டுக்கு முந்தைய கூலியை மட்டுமே பெற்று வருகிறோம். கூலி உயர்வு ஒப்பந்தம் குறித்து இருமாவட்ட கலெக்டர், தொழிலாளர் நலத்துறை, அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு நடத்தி உடன்பாடு ஏற்பட்டது. இருந்தும் இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. கட்டுப்படியாகாத கூலி காரணமாக தொழில் நலிவடைந்து தற்போது கடனாளி ஆக்கப்பட்டோம். இதனால் வங்கியினர் ஜப்தி ஏல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூலி உயர்வு பிரச்சினை, கடன் தள்ளுபடி குறித்து  கடந்த ஆட்சியின் போது தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு வந்த தி.மு.க., எம்.பி., கனிமொழி, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் விசைத்தறியாளர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். முழு ஊரடங்கு உள்ள சூழலில் வங்கியின் ஜப்தி ஏல நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். விசைத்தறியாளரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News