விளையாட்டு
விராட் கோலி - ரபாடா

தனி ஒருவராக போராடினார்: விராட் கோலிக்கு ரபாடா பாராட்டு

Published On 2022-01-12 07:56 GMT   |   Update On 2022-01-12 07:56 GMT
விராட் கோலியின் பேட்டிங் உண்மையிலேயே மிகவும் அபாரமாக இருந்தது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறும், சூழ்நிலைக்கு தகுந்தவாறும் அவர் ஆடினார் என தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா கூறியுள்ளார்.
கேப்டவுன்:

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் விளையாடியது. தென் ஆப்பிரிக்க வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் இந்தியா 77.3 ஓவரில் 223 ரன்னில் சுருண்டது.

கேப்டன் விராட் கோலி தனி ஒருவராக போராடி 79 ரன் எடுத்து அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவினார். 201 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். 4-வது வீரராக களம் இறங்கிய அவர் 9-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அவர் நிதானமான ஆட்டத்தை பொறுப்புடன் வெளிப்படுத்தினார்.

அவருக்கு அடுத்தபடியாக புஜாரா 43 ரன்னும், ரி‌ஷப்பண்ட் 27 ரன்னும் எடுத்தனர். ரபடா 4 விக்கெட்டும், மார்க்கோ ஜான்சென் 3 விக்கெட்டும், ஆலிவர், நிகிடி, கேசவ் மகராஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்திருந்தது. மார்க்ராம் 8 ரன்னுடனும், கேசவ் மகாராஜ் 6 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். கேப்டன் எல்கர் 3 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் கேப்டவுன் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் ரபடா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த டெஸ்ட் போட்டி சமநிலையில் உள்ளது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் நாங்கள் டாஸ் வெல்ல விரும்பி இருந்தோம். ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை 223 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விட்டோம். அதே நேரத்தில் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

ஆடுகள தன்மையை பொறுத்தவரை இன்றும் அதே நிலைதான் இருக்கும் என்று கருதுகிறேன். பெரிதாக மாற போவதில்லை.

இந்த நாள் சரியான நாள் என்று சொல்லமாட்டேன். மிகவும் சரியான நாள் அரிதாகவே கிடைக்கும். எனக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைந்தது. பொதுவாக ஒவ்வொரு ஆட்டத்திலும் விக்கெட்டுகளை இலக்காக வைத்துதான் வீசி வருகிறேன். எனது சக பந்து வீச்சாளர் ஜான்சென் எனக்கு உதவி புரியும் வகையில் சிறப்பாக வீசினார்.

இந்த டெஸ்டில் விராட் கோலியின் பேட்டிங் உண்மையிலேயே மிகவும் அபாரமாக இருந்தது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறும், சூழ்நிலைக்கு தகுந்தவாறும் அவர் ஆடினார்.

இவ்வாறு ரபடா கூறி உள்ளார்.
Tags:    

Similar News