செய்திகள்
தக்காளி.

தக்காளிக்கு நிலையான விலை - உடுமலை விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-07-20 10:22 GMT   |   Update On 2021-07-20 10:22 GMT
கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு அனைத்து மாவட்டங்களிலும் தக்காளி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு விலை வீழ்ச்சி ஏற்பட்டது.
உடுமலை: 

உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு ஒவ்வொரு சீசனிலும் 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில் சீசனின் போது உடுமலை தினசரி சந்தைக்கு வரத்து அதிகரித்து தக்காளியின் விலை சரிவது தொடர்கதையாக உள்ளது. அப்போது பறிக்கும் கூலிக்கு கட்டுப்படியாகாமல் செடிகளிலேயே பழங்களை விடுகின்றனர்.

சாலையோரத்தில் பறிக்கும் பழங்களை வீசும்நிலை ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கின்றனர்.கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு அனைத்து மாவட்டங்களிலும் தக்காளி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு விலை வீழ்ச்சி ஏற்பட்டது. 

இதே போல் தென்மேற்கு பருவமழை சீசனில் சாகுபடி பாதிப்புக்குள்ளாகி சந்தைக்கு வரத்து குறைவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் நடப்பாண்டு மழையை தாங்கி வளரும் பிரத்யேக வீரிய ஒட்டு ரகங்களை தேர்வு செய்து உடுமலை பகுதி விவசாயிகள் நடவு செய்தனர்.

 இதனால் பருவமழை துவங்கியும் உடுமலை தினசரி வரத்து குறையாமல், அதிகரித்து வருகிறது. அவ்வகையில் நேற்று சந்தைக்கு 14 கிலோ கொண்ட 50 ஆயிரம் பெட்டிகள் வரத்து இருந்தது. 

வரத்து அதிகரித்தும், நிலையான விலையும் கிடைத்தது. தரத்தின் அடிப்படையில் பெட்டிக்கு விலை கிடைத்தது. பருவமழையால் கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விளைச்சல், பறிப்பு பணிகள் பாதித்துள்ளது. பிற மாவட்ட வரத்து குறைந்துள்ளதால் உடுமலை சந்தைக்கு வரத்து அதிகரித்தும் விலை சரியாமல் உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 

'மழையால், தக்காளி பழங்கள் பாதிக்காத வகையில் பிரத்யேக ரகங்களை பயன்படுத்தியுள்ளோம்.  செடிகளை சணல் கயிறுடன் இணைத்து பழங்களை தரையில் விழாமல் பார்த்துக்கொள்வதால் அவற்றின் தரம் குறைவதில்லை.  இதனால் சந்தையில் ஓரளவு விலையும் கிடைத்து வருகிறது என்றனர்.

Tags:    

Similar News