லைஃப்ஸ்டைல்
உணவுப்பொருட்களை வீணாக்காமல் சமைப்பது எப்படி?

உணவுப்பொருட்களை வீணாக்காமல் சமைப்பது எப்படி?

Published On 2021-04-19 08:31 GMT   |   Update On 2021-04-19 08:31 GMT
வீட்டில் உள்ள நபர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சமைக்க வேண்டும். சமைப்பது மற்றும் சாப்பிடுவது ஆகியவற்றில் எப்படி சிக்கனமாக செயல்படலாம் என்பதற்கு சில ஆலோசனைகள்.
இன்றைய காலகட்டத்தில் காலை உணவு மதிய உணவு இரவு உணவு என்று ஒரு பட்டியலே உள்ள நிலையில் உணவில் சிக்கனம் கட்டாயம் தேவை. சமைப்பது மற்றும் சாப்பிடுவது ஆகியவற்றில் எப்படி சிக்கனமாக செயல்படலாம் என்பதற்கு சில ஆலோசனைகள்.

ஒவ்வொரு உணவுப்பொருளிலும் முழுமையாக சாப்பிடக்கூடிய பகுதியின் அளவு மாறுபடும், எனவே அவற்றை பற்றி தெரிந்து வைத்திருத்தல் அவசியம். கீரை வகைகள் 30-40 சதவிகிதம் மட்டுமே உணணக்கூடிய பகுதியை உடையவை. இது போன்ற விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது எந்தெந்த உணவுப்பொருட்களை எவ்வளவு வாங்க வேண்டும் என்று முடிவு செய்ய உதவும்.

சாம்பார் பொடி அரைக்கும்போது ஒரு கப் புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்து கொள்ளலாம். சமையலில் இந்த பொடியை பயன்படுத்தினால் சாம்பார் குழைவாகவும், கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். விலை மலிவான காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம், மேலும் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க கூடிய காய்கறிகளை தேர்ந்தேடுப்பது அவசியம்.

இரண்டு முட்டையில் ஒரு கப் கடலை மாவு கலந்துவிட்டால் 6 ஆம்லெட் வரை போட முடியும்.

காய்கறி பருப்பு வகைகளை வேக வைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்காமல் அளவான தண்ணீரில் வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். இதனால் அதிக கியாஸ் வீணாகாது.

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு போன்றவற்றை தண்ணீர் விடாமல் குக்கர் ஆவியில் வேக வைத்த பின்னர் எடுத்து வறுத்தால் ஒரு கப் எண்ணெய்க்கு பதிலாக குறைவான எண்ணெய் போதுமானதாக இருக்கும்.

அரை கிலோ புளியை தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்து மிக்ஸியில் அரைத்துகட்டியான பேஸ்ட் போன்று தயார் செய்து பிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போது இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் தினசரி கரைசலின் போது புளி வீணாகாமல் தடுக்கலாம்.

பாத்திரத்தை கழுவிய உடனே அடுப்பில் வைத்தால் அந்த பாத்திரம் சூடாகவே இரண்டு நிமிடமாகும். அதனால் கேஸ் வீணாகும், அதற்கு பதிலாக நன்றாக பாத்திரத்தை துடைத்து அடுப்பில் வைக்க வேண்டும்.

வீட்டில் உள்ள நபர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சமைக்க வேண்டும். சாப்பாடு மீதமாகி விட்டால் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் பழைய சோறாக சாப்பிடலாம். இது வெயில் காலம் என்பதால் வயிற்றுக்கு இதமாக இருக்கும். அல்லது வத்தல் போடலாம்.

இட்லி மாவு அரைத்து ஒரு வாரம் வரையில் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஒருவேளை வேகவைத்த இட்லி மிஞ்சிவிட்டால் தாளித்து இட்லி உப்புமாவாக சாப்பிடலாம்.
Tags:    

Similar News