ஆன்மிகம்
ராமசாமி கோவில்

சிற்ப ஓவியங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்த ராமசாமி கோவில்

Published On 2020-10-05 08:51 GMT   |   Update On 2020-10-05 08:51 GMT
கும்பகோணம் பொற்றாமரைக் குளத்திற்கு தென்மேற்கில் அமைந்துள்ள ராமசாமி கோவில் கலை மற்றும் சிற்ப ஓவியங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல.
கும்பகோணம் பொற்றாமரைக் குளத்திற்கு தென்மேற்கில், தஞ்சாவூர் செல்லும் சாலையில் பெரிய கடைத்தெருவிற்கு போகும் வழியில் ராமசாமி கோவில் அமைந்திருக்கிறது. நாயக்க மன்னர்களிடம் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் என்பவர், இந்தக் கோவிலை கட்டி எழுப்பியதாக தல வரலாறு சொல்கிறது. கோவில் கருவறையில் உள்ள மூலவர், பட்டாபிஷேக ராமராக வீற்றிருக்கிறார்.

ராமரும், சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு பரதன் குடைபிடித்திருக்கிறான். சத்ருக்கணன் சாமரம் வீசுகிறான். லட்சுமணன், வில் ஏந்திய நிலையில் ராமனின் கட்டளைக்காக காத்திருக்கிறான். ஆஞ்சநேயர் தன்னுடைய கையில் வீணை ஏந்தி, ராமாயணத்தை பாராயணம் செய்யும் நிலையில் காட்சி தருகிறார்.

விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காத்தல், தன்னை மீண்டும் அயோத்தி அழைத்துச் செல்ல வந்த பரதனுக்கு தன்னுடைய பாதுகைகளை அளித்தல், தனக்காக உயிர் கொடுத்த ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தல், முனிவர்களுக்காக அரக்கர்களை அழித்தல், தன்னுடைய துன்பங்களைக் கூறி வருந்திய சுக்ரீவனுக்கு, ஆறுதல் கூறி அவனுடைய ராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொடுத்தல், தன்னிடம் தஞ்சம் என்று வந்த விபீஷணனுக்கு, அபயமளித்து ராஜ்ஜியம் அளித்தல் என்று ராமபிரான் செய்தவை அனைத்தும், இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. கலை மற்றும் சிற்ப ஓவியங்களுக்கு இந்தக் கோவில் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல.
Tags:    

Similar News