செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன், 15 கி.மீ. தூரம் அடர்ந்த வனப்பகுதியில் நடைபயணமாக சென்ற போது எடுத்த படம்.

15 கி.மீ. தூரம் நடந்து சென்று மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர்

Published On 2021-07-28 01:47 GMT   |   Update On 2021-07-28 01:47 GMT
அடர்ந்த வனப்பகுதி வழியாக 15 கி.மீ. தூரம் நடந்து சென்று மலைக்கிராம மக்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறைகளை கேட்டார். அப்போது அவர்களுக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் என்று கூறினார்.
கிருஷ்ணகிரி :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு சுகாதார பணிகள், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த அவர் இரவு கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்தில் தங்கினார்.

தொடர்ந்து நேற்று கொடகரை, காமகிரி, மூக்கன்கரை மலைக்கிராமங்களில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மூக்கன்கரை மலைக்கிராமத்தில் வீடு, வீடாக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்டம் மூக்கன்கரை மலைக்கிராமத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி பகுதிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயணமாக சென்றார். அப்போது வழியில் உள்ள மலைக்கிராம மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், இங்குள்ள மலைக்கிராம மக்கள் சுகாதார நிலையம், 108 அவசர ஆம்புலன்ஸ் வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை என பல கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

தற்போது கொடகரை, காமகிரி கிராமங்களுக்கு அவசர சிகிச்சைக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அரசு துணை சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள மலைக்கிராமத்தில் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்டது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News