செய்திகள்
காரில் இருந்து தவறி ரோட்டில் விழுந்த குழந்தை

காரிலிருந்து தவறி ரோட்டில் விழுந்த ஒரு வயது குழந்தை.. கவனிக்காமல் சென்ற பெற்றோர்...

Published On 2019-09-10 04:15 GMT   |   Update On 2019-09-10 04:15 GMT
கேரளாவின் மூணார் பகுதியில் காரில் செல்லும்போது அதில் இருந்த ஒரு வயது பெண் குழந்தை, கீழே விழுந்ததைக் கூட கவனிக்காமல் பெற்றோர் சென்றுள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தின் மலைகள் அதிகம் சூழ்ந்த பகுதியான மூணாரில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு அப்பகுதி காவல்நிலையத்துக்கு போன் ஒன்று வந்துள்ளது.

அதில் பேசியவர் குழந்தை ஒன்று நடுரோட்டில் தவழ்ந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

ஒரு வயதே நிரம்பிய அந்த பெண் குழந்தை தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனத்திற்குள் இருந்த அனைவரும் அசந்து தூங்கிவிட, குழந்தை சாலையில் தவறி விழுந்துள்ளது.

காருக்கு உள்ளே இருந்தவர்கள் இதனை சற்றும் கவனிக்காமல் உறங்கியுள்ளனர். இச்சம்பவம் அந்த சாலையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சாலையில் விழுந்த குழந்தை, காட்டை நோக்கி தவழ்ந்து செல்வதும் வீடியோவில் உள்ளது.



குழந்தைக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து துணை ஆய்வாளர் சந்தோஷ் கூறுகையில், ‘எனக்கு இரவு 9.40 மணிக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. 10 மணி அளவில் குழந்தை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடனடியாக குழந்தைக்கு மருத்துவ முதலுதவியை கொடுத்தோம். பின்னர் குழந்தையின் பெற்றோர் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளது தெரிய வந்தது. உடனே, நாங்கள் பெற்றோரை தொடர்பு கொண்டோம். குழந்தை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது’ என கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஓர் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு, குழந்தையின் குடும்பம் சொந்த ஊர் நோக்கி சென்றுள்ளது. அப்போதுதான் இச்சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News