சிறப்புக் கட்டுரைகள்
டாக்டர். பிரபு திலக்

ஆறுமனமே ஆறு: பேணுவோம்... பொது இடநாகரிகம்- 28

Published On 2022-04-17 10:02 GMT   |   Update On 2022-04-17 10:02 GMT
‘எல்லோரும் சொல்வதைப்போல நான் மெதுவாகத்தான் நடக்கிறேன். ஆனால், ஒருபோதும் பின்னோக்கி நடக்க மாட்டேன்.’ - முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.

‘எல்லோரும் சொல்வதைப்போல நான் மெதுவாகத்தான் நடக்கிறேன். ஆனால், ஒருபோதும் பின்னோக்கி நடக்க மாட்டேன்.’ - முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.

ஆபிரகாம் லிங்கன் இப்படிச் சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு நண்பர்களே..! டூ வீலர்ல போய்க்கிட்டு இருக்கோம். நமக்கு முன்னாடி போன கார், பஸ், ஆட்டோ ஏதோ ஒண்ணு திடீர்னு ரிவர்ஸ்ல பின்னாடி வருதுன்னு வெச்சுக்கோங்க. என்ன ஆகும்... பதறிப்போவோமா இல்லையா..? அந்த நேரத்துல நமக்கு விபத்து ஆனாலும் ஆகலாம்; அடிபடலாம். ஆக, எல்லாமே ஒரு ஒழுங்குல இருந்தாத்தான் பொது வாழ்க்கை பிரச்சினையில்லாம அதுபாட்டுக்கு நகர்ந்துக்கிட்டு இருக்கும். அதைத்தான் ஆபிரகாம் லிங்கன் `நான் மெதுவா நடந்தாலும் நடப்பேனே தவிர, பின்னாடி நடந்து மத்தவங்களுக்கு இடைஞ்சல் கொடுக்க மாட்டேன்’னு சொல்றார். ரோட்டுல வாகனங்கள் இடது பக்கமாத்தான் போகணும்; பாதசாரிகள் பிளாட்பாரத்துலதான் நடக்கணும்; போக்குவரத்து விதிகளை ஒழுங்கா பின்பற்றி நடக்கணும்...

இதெல்லாம் விதிகள்னு வெச்சுக்கிட்டாலும் கூட, ஒரு பொது ஒழுங்கு, பொது இடத்துல இப்படித்தான் நடந்துக்கணுங்கிற ஒரு பொது இட நாகரிகம்னும் இதை எடுத்துக்கலாம். ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் பின்பற்றவேண்டிய ஒழுங்கு, நாகரிகம் இது. அரசாங்கம் வலியுறுத்துற விதிகள், சட்டதிட்டங்களெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தப் பொது இட நாகரிகத்தை சிலர் கடைப்பிடிக்காததுனால என்னவெல்லாம் பிரச்சினை வருதுனு கொஞ்சம் பார்க்கலாமா..?

பொது இட நாகரிகம்... ரொம்ப விரிவா பேசவேண்டிய வி‌ஷயம்னு நான் நினைக்கிறேன். ஏன்னா, உலகத்துக்கே வழிகாட்டுறது நம்ம நாகரிகம்னு சொல்றாங்க. ஆனா, அப்படிப்பட்ட நாகரிக மனிதர்களான நாம கொஞ்சமாவது இந்தப் பொது நாகரிகத்தை ஃபாலோ பண்றோமான்னு கேட்டா இல்லைன்னுதான் தோணுது.

ரெயில் பயணம். திருச்சிக்குப் போய்க்கிட்டிருந்தேன். ஏ.சி கம்பார்ட்மென்ட். நான் ரெயில்ல ஏறி உக்கார்ந்ததுல இருந்து பார்க்குறேன்... எதிர்ல இருக்குற பர்த்ல ஒருத்தர் ஆனந்தமா பாட்டுக் கேட்டுக்கிட்டு இருந்தார். ஹெட்போன்ல கேட்டாலும் பரவாயில்லை... நல்லா சத்தமா, ஸ்பீக்கர்ல போட்டு பாட்டுக் கேட்டுக்கிட்டு இருந்தார். அவரோட செல்போன்ல பல பாடல்களை டவுன்லோடு பண்ணிவெச்சிப்பார்போல. எல்லாமே சினிமாவுல சொல்ற வழக்கப்படி `ஐட்டம் சாங்ஸ்...’ என் பக்கத்துலயே ஒரு குடும்பம். அப்பா, அம்மா, அவரோட பொண்ணு. அந்தப் பொண்ணுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா 18, 19 வயசிருக்கலாம்.

அவங்க அந்தப் பாட்டையெல்லாம் கேக்க முடியாம, நெளிஞ்சுக்கிட்டிருந்தாங்க. அப்பா, ஜன்னல் வழியா பார்க்குறதும், எதையாவது சத்தமா சொல்லிச் சிரிக்கிறதும், நைட் டிபனை எடுத்துப் போட்டு பேசிக்கிட்டே சாப்பிடுறதும்னு என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க. எவ்வளவு நேரம்தான் இப்பிடி சமாளிக்க முடியும்... அவங்களால முடியலை. நான், எதிர்பர்த்துல இருப்பவரைக் கூப்பிட்டேன்... `பாஸ்... நைட் டைம்... நாங்கள்லாம் தூங்கணும்ல... ஹெட்போன்ல பாட்டுக் கேளுங்க’ன்னு சொன்னேன். அதுக்கு அவர், `என்கிட்ட ஹெட்போன்லாம் இல்லைங்க. அதுல கேக்குறதும் எனக்குப் பிடிக்காது. நீங்க வேணும்னா பஞ்சைவெச்சு காதை அடைச்சுக்கங்க... இல்லை, எங்கேயாவது புகார் பண்ணணும்னா பண்ணிக்கோங்க... இதுக்கெல்லாம் கேஸ் கிடையாது’ன்னாரே பார்க்கலாம். ஆறு, ஏழு மணி நேர டிராவல்... இதுல ஏன் பிரச்சினையை வளர்த்துக்கணும்னுதான் என்னை மாதிரி எல்லோருக்குமே தோணும். இதுதான் நம்மகிட்ட இருக்குற சிக்கல். 100க்கு 99 பேர் இதையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போயிடுறாங்க. இந்த அட்ஜஸ்ட்மென்ட், பலருக்கும் வசதியாகப் போயிடுதுங்கறதுதான் வேதனை.

நம்ம ஊர் பிள்ளைங்களுக்கு ஆடி, சித்திரை மாதங்கள்லதான் அரைப் பரீட்சை, முழுப் பரீட்சை நடக்கும். கரெக்டா அந்த நேரத்துலதான் நம்ம தெருவுல இருக்குற அம்மன் கோயில்ல திருவிழாவும் நடக்கும். லவுட் ஸ்பீக்கர்ல சத்தமா பாட்டுப் போடுவாங்க. காது கிழியும். அக்கம் பக்கத்துல, நோய்வாய்ப்பட்ட பெரியவங்க இருப்பாங்க... அப்போதான் பிறந்த பிஞ்சுக் குழந்தைகள் இருப்பாங்க. எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டாங்க. அவங்ககிட்ட போய் `வால்யூமைக் கொஞ்சம் குறைச்சு வெய்யுங்க’ன்னுகூடச் சொல்ல முடியாது. தெய்வ குத்தமாயிடும். சண்டைக்கு வந்துடுவாங்க. இதுகூடப் பரவாயில்லை. நாலு நாளு, ஒரு வார இம்சை. கொஞ்சம் பொறுத்துக்கிட்டா கடந்து போயிடலாம்.

ஆனா, டூருக்குப் போற நம்ம மக்கள் படுத்துற பாடு இருக்கே... அதுதான் தாங்க முடியாதது. சித்தன்ன வாசலுக்குப் போய் அந்த ஓவியங்களுக்குப் பக்கத்துல கல்லால கீறி ஹார்ட்டூன் போட்டு, அம்பு வரைஞ்சு பேரை எழுதிட்டு வருவாங்க. மாமல்லபுரம், தஞ்சைப் பெரிய கோயில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில்னு பாரம்பரியம் மிக்க பல இடங்கள்ல இப்பிடி எழுதி வெக்கிறது அவங்க யாருக்கும் அசிங்கமா தெரியறதில்லை. இப்பிடி நம்மளோட எத்தனையோ பழமையான, புராதனச் சின்னங்களை அடையாளம் தெரியாம சிதைச்சு வெச்சுருக்காங்க. இது என்ன நாகரிகம்?

என் அம்மா ஒரு தடவை ஐதராபாத்துக்குப் போயிட்டு வந்தாங்க. அப்போதான் 3டி தியேட்டர் இந்தியாவுல அறிமுகமாகியிருந்த காலம். `ஐதராபாத்துல ஒரு தியேட்டர் பிரமாதமா இருக்கு... 3டி படம் பார்த்தா அப்பிடி ஒரு தியேட்டர்ல பார்க்கணும். தரைடாய்லெட்டெல்லாம் படுசுத்தமா, வழுவழுன்னு அவ்வளவு அழகா இருக்கு’ன்னெல்லாம் சொன்னாங்க. நானும் அங்கே போகணும், போகணும்னு நினைச்சு ரெண்டு வரு‌ஷம் ஓடிப் போச்சு. அதுக்கப்புறம் ஒரு நாள் அங்கே போற வாய்ப்பும் அமைஞ்சுது. போய்ப் பார்த்தா தியேட்டரா அது... சுவத்துல எங்கே பார்த்தாலும் பான் பராக் எச்சில் கறை... டாய்லெட்டா... சொல்லவே வேணாம். அவ்வளவு கீழ்த்தரமா இருந்துச்சு. சுவத்துலயெல்லாம் என்னென்னவோ அசிங்க அசிங்கமா வர்றவங்க போறவங்க எழுதிவெச்சிருந்த கீறல்கள். பெயர்கள், போன் நம்பர்கள். ரெண்டே வரு‌ஷத்துல ஒரு தியேட்டரை அவ்வளவு பிரமாதமான மனு‌ஷங்களால இப்பிடி அலங்கோலமா மாத்திவெக்க முடியுமான்னு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.

ஒரு நகரம் தூய்மையானதா, அதையும் தாண்டி சுகாதாரமானதா, அழகானதா மாறணும்னா என்ன நடக்கணும்? குப்பை இல்லாம இருக்கணும், காற்று மாசு, ஒலி மாசு இதெல்லாம் இருக்கவே கூடாது. சுற்றுச்சூழல் அருமையானதா, ரம்மியமா இருக்கணும். அதுக்கு நம்ம மக்கள் ஒத்துழைப்பாங்கன்னா நினைக்கிறீங்க? அதுதான் கொஞ்சம் கஷ்டமான வி‌ஷயமா இருக்கு.

ஒரு உதாரணம் சொல்றேன். சென்னை மாநகராட்சியில, காலையில தெருவுக்குத் தெரு குப்பைகளை அள்ளிட்டு வர்றதுக்கு தள்ளு வண்டி, பேட்டரி வண்டினு என்னென்னவோ வெச்சிருக்காங்க. குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடா அந்த வண்டிகள்ல போட்டு எடுத்துக்கிட்டுப் போய் ஒரு பொதுவான இடத்துல இருக்குற பெரிய குப்பைத் தொட்டியில போடுவாங்க. அப்புறம் மாநகராட்சியில இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட லாரி வந்து அந்தக் குப்பைகளை அள்ளிக்கிட்டுப் போகும். நல்லா கவனிச்சுப் பார்த்தீங்கன்னா தெரியும்... நம்ம தெருவுக்கு வர்ற தூய்மைப் பணியாளர்களோட சின்ன வண்டியிலேயே ரெண்டு பெரிய தொட்டிகள் இருக்கும். ஒண்ணு, மக்கும் குப்பையைப் போடுறதுக்கு... இன்னொண்ணு, பிளாஸ்டிக் மாதிரியான மக்காத குப்பையைப் போடுறதுக்கு. இப்படி குப்பைகளைப் பிரிச்சுப் போடுற மக்களை விரல்விட்டு எண்ணிடலாம். அதை விடுங்க. மொத்தமாக்கூட குப்பையைப் போடட்டும். தூய்மைப் பணியாளர்கள் பிரிச்சுப்பாங்க. ஆனா, ஒவ்வொரு நாள் காலையிலயும் வர்ற இந்த வண்டியிலகூடப் போடாம, வீட்லேயிருந்தே குப்பைகளை ரோட்டுல தூக்கி வீசுற கொடுமை இருக்கே... அதுதான் வேதனை.

சென்னை சூளைமேடு, எம்.ஜி.ஆர் நகர்,சைதாப்பேட்டை, வண்ணாரப்பேட்டைன்னு பல பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மத்தியான நேரத்துல போய்ப் பார்த்தீங் கன்னா தெரியும். அன்னிக்கி வார விடுமுறை, நான் வெஜ் சாப்பிடுற நாள் இல்லியா? தெருவுல இருக்குற ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் மீன் செதில்கள், இறால் துண்டுகள், கோழி, ஆடு இறைச்சி மிச்சங்கள், எச்சில் இலைகள், நறுக்கப்பட்ட காய்கறித் துணுக்குகள்னு பிளாஸ்டிக் பேக்குகள்லயும், சில இடங்கள்ல வெடிச்சு சிதறி குப்பையாவும் கிடக்கும். இந்தக் குப்பையையெல்லாம் அடுத்த நாள் காலையில வர்ற தூய்மைப் பணியாளர்கள்தான் சேகரிச்சு எடுத்து குப்பை வண்டியில போட்டாகணும். அப்புறம் எப்படி நகரம் அழகானதா, சிங்காரமானதா மாறும்?

நம்ம அரசு, ஒவ்வொரு நகராட்சியிலயும் காசு செலவு பண்ணி, தெருவோட பெயர்ப் பலகையை வெக்குது. அண்ணல் காந்தி தெரு, நேரு தெரு, பெரியார் தெரு, அண்ணா தெருன்னு எல்லாமே ரொம்ப மரியாதைக்குரிய தெருப்பெயர்கள் தான். ஆனா, நம்ம மக்கள் என்ன பண்றாங்க... கரெக்டா அந்த போர்டுல `கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர், கட்சி போஸ்டர்னு ஒட்டிடுறாங்க. அதுக்கப்புறம் கூரியர் பணியாளரோ, ஒரு அட்ரஸைத் தேடி வர்றவங்களோ தெரு பேரைத் தெரிஞ்சுக்க முடியாம முழிக்கவேண்டியதுதான். இதுவா நாகரிகம்?

பேருந்துநிலையங்கள்ல பாலூட்டும் தாய்மார்கள் அறைன்னு கட்டிவெச்சிருக்காங்க. அங்கே போய்ப் பார்த்தீங்கன்னா தெரியும். அதுல ஒண்ணைக்கூட பெண்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தம் பண்ணிவெச்சிருக்காங்க.

பல அரசு ஆஸ்பத்திரி வளாகங்கள் இன்னும் மோசம். இத்தனைக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகம் மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வச்சிக்க எவ்வளவோ பாடுபடுது. ஆனா, அன்றாடம் ஆயிரக் கணக்கானவர்கள் நடமாடும் அத்தகைய இடங்களைச் சுத்தமா வச்சிக்கணும்னு மக்களும் நெனைக்கணும் இல்லியா?

இதெல்லாம் ஒழுங்காகணும்னா பொது இட நாகரிகத்தை ஒவ்வொருத்தரும் கடைப்பிடிச்சே ஆகணும். கண்ட இடத்துல எச்சில் துப்புறது, பொது இடத்துல சிறுநீர் கழிக்கிறது, மத்தவங்களுக்கு தொல்லை கொடுக்குற மாதிரி செல்போன்ல சத்தமா பேசுறது, பொதுக்குளங்கள்ல குப்பை, பிளாஸ்டிக், பாட்டில்களைத் தூக்கி எறியுறது, பொது இடங்கள்ல புகைபிடிக்கறது, வீட்டுல அடைச்சுக்கிடந்த கழிவுநீரை ரோட்டுக்குத் திருப்பிவிடுறதுன்னு பல அநாகரிகமான காரியங்களை அடுக்கிக்கிட்டே போகலாம்.

இதெல்லாம் ஒரு வி‌ஷயமான்னு ஒதுக்கித் தள்ளிட வேண்டாம் நண்பர்களே... பொது இட நாகரிகம்கிறதை நம்ம ரத்தத்தோட கலந்த ஒண்ணா ஆக்கிக்கிட்டா அது நமக்கு மட்டுமில்லை... நம்ம சமுதாயத்துக்கே நல்லது!

தொடர்புக்கு:

drpt.feedback@gmail.com

Tags:    

Similar News