செய்திகள்
அதிமுக, திமுக

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக-திமுக, காங்.வேட்பாளர்கள் யார்?

Published On 2019-09-22 07:22 GMT   |   Update On 2019-09-22 10:16 GMT
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை:

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதியில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன.

2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். அவர் பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ராதாமணி உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மரணம் அடைந்தார்.

இதனால் இந்த 2 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. 30-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்தது.

பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பறக்கும் படை சோதனை 2 தொகுதிகளிலும் தொடங்கியது.

வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குவதால் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

ஆளும்கட்சியான அ.தி.மு.க. இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாங்குநேரியில் போட்டியிடுகிறது.


இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க-தி.மு.க. கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சியிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. இன்றும், நாளையும் விருப்பமனுக்களை பெறுகிறது. அந்த கட்சி நாளை வேட்பாளர்களை அறிவிக்கிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் 24-ந்தேதி அறிவிக்கப்படுகிறார். நேர்காணல் நடத்தி வேட்பாளரை தேர்வு செய்கிறது.

நாங்குநேரியில் அ.தி.மு.க. -காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட முக்கிய நிர்வாகிகள் பலரும் விரும்புகின்றனர்.

அ.தி.மு.க.வில் முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ்பாண்டியன், பிரபாகரன், நெல்லை புறநகர் மாவட்ட பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், செயலாளர் நடராஜன், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் காபிரியேல் ஜெபராஜன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், இட்ட மொழி ஊராட்சி முன்னாள் தலைவர் டென்சிங், ஆர்.எஸ்.முருகன், பாப்புலர் முத்தையா, ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரசில் மூத்த தலைவர் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம். சிவகுமார், வி.பி.துரை, வக்கீல் காமராஜ், தமிழ் செல்வன், முரளி ராஜா, மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ஊர்வசி அமிர்தராஜ், மோகன் குமார ராஜா, வானுமா மலை ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க- தி.மு.க. நேரடியாக மோதுகிறது. அ.தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு முத்தமிழ்செல்வன், சிந்தாமணி வேலு, பேட்டை முருகன், கண்டமங்கலம் ராமதாஸ், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

தி.மு.க.வில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், ஜனகராஜ், அன்னியூர் சிவா, ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி கலைச் செல்வன் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் கடந்த 5 தேர்தல்களில் 2 முறை அ.தி.மு.க.வும், 2 முறை காங்கிரசும், ஒருமுறை இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

1996-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணன் 37,342 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் கருணாகரன் 34,193 வாக்குகளும் பெற்றனர். 3,149 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

2001-ல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாணிக்கராஜ் 46,619 வாக்குகளும், ராமச்சந்திரன் 37,458 வாக்குகளும் பெற்றனர். 9,161 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்க ராஜ் வெற்றி பெற்றார்.

2006-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 54,170 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் சூர்யகுமார் 34,095 வாக்குகளும் பெற்றனர். 20,075 வாக்குகள் வித்தியாசத்தில் வசந்தகுமார் வெற்றி பெற்றார்.

2011-ல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எர்ணாவூர் நாராயணன் 65,510 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் 53,230 வாக்குகளும் பெற்றனர். 12,280 வாக்குகள் வித்தியாசத்தில் எர்ணாவூர் நாராயணன் வெற்றி பெற்றார்.

2016-ல் காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் 74,932 வாக்குகளும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட விஜய குமார் 57,617 வாக்குகளும் பெற்றனர். 17,315 வாக்குகள் வித்தியாசத்தில் வசந்த குமார் வெற்றிபெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதி கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் உருவானது. முன்பு இந்த தொகுதி கண்டமங்கலம் தொகுதியுடன் இணைந்து இருந்தது.

கண்டமங்கலம் தொகுதியாக இருந்தபோது அ.தி.மு.க. 5 முறையும், தி.மு.க. 5 முறையும் வெற்றி பெற்றன. தொகுதி சீரமைப்புக்கு பிறகு அ.தி.மு.க-தி.மு.க. தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ராதாமணி 63,757 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் வேலு 56,845 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் 41,428 ஓட்டுகளும் பெற்று தோல்வியை தழுவினர். 

இடைத்தேர்தலில் பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா, ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதால் தொகுதியை கைப்பற்ற முடியும் என்று அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

தி.மு.க.வினரும் கட்சி பலம் மற்றும் கூட்டணி பலத்துடன் வெற்றிபெற்று விடுவோம் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123ஆகவும், தி.மு.க. கூட்டணியின் பலம் 108ஆகவும் உள்ளன. சுயேட்சை எம்.எல்.ஏ.வாக டி.டி.வி.தினகரன் உள்ளார்.

Tags:    

Similar News