செய்திகள்
நெல்லை கலெக்டர் விஷ்ணு

பள்ளிக்கூடங்களில், அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - தலைமை ஆசிரியர்களுக்கு, கலெக்டர் உத்தரவு

Published On 2021-01-19 14:22 GMT   |   Update On 2021-01-19 14:22 GMT
10, 12-ம் வகுப்புகள் இன்று தொடங்குவதையொட்டி அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. இது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் 312 அரசு, அரசு உதவிபெறும், தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள் உள்ளன. அனைத்து பள்ளிக்கூட மாணவர்கள் உள்ளே வரும் போது கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்து வர வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் மூலம் முறையாக பரிசோதனை செய்ய வேண்டும்.

பள்ளிக்கூடங்களின் நுழைவு வாயிலில் கை கழுவுவதற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் 25 மாணவர்களுக்கு மிகாமல் அமரச் செய்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும். கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வு நடத்தக்கூடாது. நீச்சல் குளங்கள் இருப்பின் பயன்படுத்தக்கூடாது.

அரசின் வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து தலைமை ஆசிரியரும் பின்பற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளி வளாகங்களில் கழிப்பறைகளை முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகளை வழங்க வேண்டும். எந்த ஒரு அவசர நிலைக்கும் சுகாதார நிலையத்தின் அவசர தொடர்பு என்னை தயாராக வைத்திருக்க வேண்டும்.

மாணவர்கள் வருகையில் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. சுகாதார துறை அலுவலர்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். ஒரு தாலுகாவிற்கு துணை கலெக்டர் நிலையில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் அலர்மேல் மங்கை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருணாசலம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News