இந்தியா
திருப்பதி கோவில்

ரேணிகுண்டா விமான நிலையத்தில் திருப்பதி தரிசன டிக்கெட் விநியோகம்

Published On 2022-01-19 10:22 GMT   |   Update On 2022-01-19 10:22 GMT
எம்.பி. குருமூர்த்தி தேவஸ்தானத்துக்கு விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையத்தில் திருப்பதி தரிசன டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட உள்ளது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆன்லைனில் ரூ.300 மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்றவர்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய பக்தர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி, ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு டெல்லி, விஜயவாடா, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விமானங்கள் வருகின்றன. விமானம் மூலம் திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் பிரத்தியேக கவுண்டர்கள் திறந்து நேரடி தரிசன டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் என திருப்பதி எம்.பி. குருமூர்த்தி தேவஸ்தானத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்கப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையத்தில் தரிசன டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியிருப்பதாவது:-

ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு தினமும் பல்வேறு மாநிலங்களிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றனர்.

ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் நேரடி தரிசன டிக்கெட்டுகள் வழங்குவதன் மூலம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் டிக்கெட்டுகளை பெற்று தரிசனத்திற்கு வர வசதியாக இருக்கும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி நபர் ஒருவருக்கு ரூ.10,500 செலுத்தி தரிசனம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்ற குருமூர்த்தி எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று விரைவில் கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது என்றார்.

திருப்பதியில் நேற்று 33,971 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11,356 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.62 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News