செய்திகள்
கரண் சர்மாவுடன் எம்எஸ் டோனி

ஏழு பந்து வீச்சாளர்கள், ஜடேஜாவின் ஆல்-ரவுண்ட் பெர்.ஃபார்மன்ஸ்: சென்னை அணி வெற்றி குறித்து ஒரு பார்வை

Published On 2020-10-14 09:55 GMT   |   Update On 2020-10-14 09:55 GMT
தல டோனி ஏழு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க, ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை நிரூபிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.
ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று தரவரிசையில் 7-வது இடத்தை பிடித்து துவண்டு இருந்தது சிஎஸ்கே.

7-வது போட்டியில் தோல்வியடைந்த பின்னர், தலைக்கு மேல் வெள்ளம் போனபின் ஜான் போனால் என்ன? முழம் போனால் என்ன? என்ற பழமொழிக்கு ஏற்ப வருகிறதை பார்ப்போம் என்று தல டோனி கூறினார்.

ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் டெத் ஓவரில் சொதப்புவதால் கடந்த போட்டியில் விளையாடிய ஜெகதீசனை நீக்கி விட்டு பியூஷ் சாவ்லாவை அணிக்குள் கொண்டு வந்தார்.

இதனால் தீபக் சாஹர், சாம் கர்ரன், வெயின் பிராவோ, ஷர்துல் தாகூர், கரண் சர்மா, சாவ்லா, ஜடேஜா என ஏழு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினார்.

இந்த காம்பினேசனை வைத்துக் கொண்டு சேஸிங் செய்ய கடினமாக இருக்கும் என்பது டோனிக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம் என களம் இறங்கினார்.

டாஸ் சிஎஸ்கேவுக்கு சாதகமாக விழ, அப்பாடா.... என பெருமூச்சு விட்டார். டோனி. கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங்  தேர்வு செய்தார்.

பேட்ஸ்மேன்களிடம் எப்படியாவது 160 ரன்களை தாண்டிவிட வேண்டும் என திட்டமிட்டார். இதற்காக யாரும் எதிர்பார்க்காத வகையில் நம்ம சுட்டிப்பையன் சாம் கர்ரனை டு பிளிஸ்சிஸ் உடன் தொடக்க ஜோடியா களம் இறக்கினார்.

தன்னுடைய வேலை வரனும், அடிக்கனும், செல்லனும் என்பதை புரிந்து கொண்ட சாம் கர்ரன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்கள் அடித்தார். ஆனால் டு பிளிஸ்சிஸ் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

35 ரன்னுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் வாட்சனுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் இன்னிங்சை மெதுவாக நகர்த்தினர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோரும் ஓவருக்கு 6 ரன்கள் என்றபடியே வந்து கொண்டிருந்தது. 6.4 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

வாட்சன் - அம்பதி ராயுடு ஜோடி 45 பந்தில் 50 ரன்களை எடுத்தது. இதனால் சென்னை அணி 13.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

மிடில் ஆர்டர் பணி முடிந்து அதிரடியை தொடக்க நினைத்த வாடச்ன் 42 ரன்னிலும், அம்பதி ராயுடு 41 ரன்னிலும் வெளியேறினர்.

வாட்சன் ஆட்டமிழக்கும்போது சிஎஸ்கே 16.2 ஓவரில் 120 ரன்கள் எடுத்திருந்தது. டெத் ஓவரில் எம்எஸ் டோனி, ஜடேஜா என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்கையில், டோனி இமாலய சிக்சருடன் 21 ரன்கள் அடித்தார்.

ஜடாஜா அதிரடியாக விளையாடி 10 பந்தில் 25 ரன்கள் விளாசினார். இதனால் டெத் ஓவரில் 58 ரன்கள் குவிக்க சிஎஸ்கே 167 ரன்கள் சேர்த்தது. இது கட்டுப்படுத்தக் கூடிய ஸ்கோர் என்பதால் சிஎஸ்கே-வுக்கு நம்பிக்கை வந்தது.

அடுத்து ஐதராபாத் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், பேர்ஸ்டோவை சாய்த்து விட்டால் வெற்றிக்கனியை பறித்து விடலாம் என்ற நோக்கத்தில் களம் இறங்கியது சிஎஸ்கே.

அவர்கள் நினைத்தது போல் நம்ம சுட்டிப்பையனின் 2-வது ஓவரில் நடந்தது. வார்னனை 9 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார். அடுத்து வந்த மணிஷ் பாண்டேவை இதே ஓவரின் கடைசி பந்தில் வெயின் பிராவோ மின்னல் வேகத்தில் ரன்அவுட் ஆக்க, 4 ஓவரில் 27 ரன்னுக்குள் 2 விக்கெட்  வீழ்ந்தது. இதனால் கால்வாசி போட்டி சென்னை கைக்குள் வந்தது.

அடுத்து பேர்ஸ்டோவ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். ஜடேஜா, கரண் சர்மா, பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாகூர் மிடில் ஓவரில் அசத்தினர்.

ஜடேஜா பேர்ஸ்டோவை 23 ரன்னில் வெளியேற்றினார். அப்போது சென்னை பக்கம் பாதியளவு போட்டி திரும்பியது. அதன்பின் முழு சுமையையும் கேன் வில்லியம்சன் சுமந்தார். அவரால் டபுள்ஸ், சிங்கிள் அடிக்க முடிந்ததே தவிர பவர் ஹிட்டர் போன்று அதிரடி ஆட்டத்திற்கு சிஎஸ்கே பவுலர்கள் இடம் கொடுக்க முடியவில்லை.

டெத் ஓவரில் ஐதராபாத் அணிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் விஜய் சங்கர் (12) வெளியேற்றினார்.

18 பந்தில் 46 ரன்கள் இருந்த நிலையில், கரண் சர்மா வீசினார். முதல் பந்தில் கேன் வில்லியம்சன் பவுண்டரி அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்த பந்தில் வில்லியம்சனை தூக்கினார் கரண் சர்மா. அவர் 57 ரன்னில் அடித்து வெளியேறினார். அடுத்து வந்த ரஷித் கான் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி நதீம் ஒரு பவுண்டரி அடிக்க 19 ரன்கள் விட்டுக்கொடுத்தது.

இதனால் கடைசி இரண்டு ஓவரில் 27 ரன்களே தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் அந்த ஓவரை அட்டகாசமாக வீசி ரஷித் கானை அவுட்டாக்கி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அப்போது போட்டி சென்னை கைக்கு முழுவதுமாக திரும்பியது. கடைசி ஓவரில் பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க 20 ரன்னில் வெற்றி வாகை சூடியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஜடேஜா 10 பந்தில் 25 ரன்களும், சாம் கர்ரன் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டும், டெத் ஓவுரில் ஷர்துல் தாகூர் மற்றும் பிராவாவோயின் சிறப்பான பந்து வீச்சு, சிஎஸ்கேவின் அட்டகாசமான பீல்டிங் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
Tags:    

Similar News