செய்திகள்
கைது

டெல்லியில் தடையை மீறி பட்டாசு விற்க முயன்ற இருவர் கைது- 500 கிலோ பட்டாசுகள் பறிமுதல்

Published On 2021-10-28 03:39 GMT   |   Update On 2021-10-28 03:39 GMT
உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு ஏற்றுமதி செய்து பட்டாசுகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:

நாட்டின் தலைநகரான டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தீபாவளி நெருங்குவதால் பட்டாசு வெடிப்பதன் மூலம் காற்று மாசு மேலும் அதிகரிக்க அதிகளவில் வாய்ப்புள்ளது. இதனால்,  டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி அன்று டெல்லியில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்பனை செய்யவும் 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு ஏற்றுமதி செய்து பட்டாசுகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து, வடக்கு துணை போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி கூறியதாவது:

டெல்லியில் வடக்கு டெல்லி  சதார் பஜார் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின்பேரில் இருந்த வாகனத்தை மடக்கி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில் இருந்த இருவரிடம் விசாரித்ததில், உள்ளே வீட்டு உபயோகப் பொருட்கள் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், அந்த நபர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை சோதனையிட்டபோது அதில் பட்டாசுகள் இருந்தது தெரியவந்தது.

இருவரிடமும் மேற்கொண்டு விசாரித்ததில், அவர்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பயஸ் (19) மற்றும் பில்லு (21) என்பதும்,  வடக்கு டெல்லியில் உள்ள சதார் பசார் பகுதியில் சில்லரை விற்பனையாளர்களிடம் பட்டாசுகளை விற்பனை செய்ய எடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, வாகனத்தில் இருந்த 500 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News