செய்திகள்
மதுபானம்

டாஸ்மாக் பார்கள் விரைவில் மீண்டும் திறப்பு- கட்டுப்பாட்டு விதிகள் தயாராகிறது

Published On 2021-09-20 06:36 GMT   |   Update On 2021-09-20 07:30 GMT
மதுபான பார்களின் உரிமங்களை புதுப்பிக்க டெண்டர் விடப்பட உள்ளது. டெண்டர் செயல்முறை முடிந்தவுடன் மதுபான பார்களுக்கான கட்டுப்பாட்டு விதிகள் தயாராகிறது.
சென்னை:

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்த பார்கள் மொத்தம் 3,281 உள்ளன. சென்னை மண்டலத்தில் மட்டும் 750 மதுபான பார்கள் உள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதனுடன் மதுபான பார்களும் மூடப்பட்டன.

கடந்த ஆண்டு ஊரடங்கு தளர்வை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போதிலும் மதுபான பார்கள் திறக்கப்படவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மதுபான பார்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கினார்.



இதையடுத்து அப்போது தமிழகம் முழுவதும் பார்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த மே மாதம் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவத்தொடங்கியதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் ஆகியவை மீண்டும் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் வந்தது.

இதன்காரணமாக அவ்வப்போது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பார்கள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்று
தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருக்கிறது. இதையடுத்து மதுபான பார்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து பார்களின் உரிமங்களும் கிட்டத்தட்ட காலாவதியாகி விட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக உரிமங்களை புதுப்பிப்பதற்கான டெண்டர் விடப்படவில்லை. பார்கள் மூடப்பட்டு இருப்பதால் பலர் சாலைகளில் மது அருந்துகிறார்கள். இது மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இதையடுத்து மதுபான பார்களின் உரிமங்களை புதுப்பிக்க டெண்டர் விடப்பட உள்ளது. டெண்டர் செயல்முறை முடிந்தவுடன் மதுபான பார்களுக்கான கட்டுப்பாட்டு விதிகள் தயாராகிறது. அதன்பிறகு மீண்டும் மதுபான பார்கள் திறக்கப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


Tags:    

Similar News