செய்திகள்
திருநாவுக்கரசர் எம்பி

காஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2019-08-18 10:33 GMT   |   Update On 2019-08-18 10:33 GMT
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது என்று மதுரையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களிடம் கூறியுள்ளார்.

மதுரை:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முப்படைகளுக்கு தனித்தனி தளபதிகள் இருந்தனர். இப்போது ஒரே தளபதி என்று மாற்றியிருப்பது இந்தியாவை பொருத்தவரை இது ஒரு அவசியமற்ற செயலாகும்.

சில நாடுகளில் தவிர்க்க முடியாமல் ராணுவ புரட்சியால் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ராணுவத்திற்கு முப்படைகளின் தலைமைக்கு ஒரே தலைவர் என்பது அவசியமற்ற மாற்றம்.

மத்திய அரசு ஒவ்வொரு துறையிலும் தலையீடு செய்கிறது. தற்போது ராணுவத்திலும் தலையிட்டு வருகிறது.

நடுத்தர மக்கள் அதிகமாக உபயோகிப்பது பால். அரசாங்கம் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதற்கு எந்தவித வழிவகையும் செய்யவில்லை.

தமிழகத்தில் பல கோடி பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். மாநில அரசு அதிகமாக பாலின் விலையை உயர்த்துவது என்பது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பொருத்தவரையில் அந்த மாநிலம் இந்தியாவிற்கு சொந்தமானது என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரசின் நிலைப்பாடு அதுதான். அதே நேரத்தில் மற்ற நாடுகள் தலையீடு காஷ்மீர் விவகாரத்தில் இருக்கக் கூடாது என்பதும் காங்கிரசின் நிலைப்பாடு.

சிறப்பு அந்தஸ்து 370-ஐ மாற்றக் கூடாது என்று நாங்கள் சொல்ல வர வில்லை. அப்படி மாற்றுகிற போது அந்த மாநில மக்களின் சம்மதத்தோடு மாற்ற வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். காஷ்மீர் மக்களின் ஆதரவோடு செய்ய வேண்டிய விசயத்தை ஆளுநர் ஆட்சி அமைத்து, காஷ்மீரில் நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த தலைவர்களை கைது செய்துள்ளனர். இன்னும் பலபேர் சிறைக்கைதிகளாக உள்ளனர்.

மக்களுக்காக பாடுபட கூடிய அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் சிறையில் வைத்து விட்டு காஷ்மீரில் என்ன சீர் திருத்தத்தை செய்யப் போகிறார்கள். மத்திய அரசு அமைப்புகளால் அறிவிக்கப்படும் வேலை வாய்ப்புகளாக இருக் கட்டும், தமிழகத்தில் இருக்கக்கூடிய நிறுவன வேலை வாய்ப்புக்களாக இருக் கட்டும் தமிழ்நாட்டில் இருக் கக்கூடியவர்களுக்கு வேலை கிடைப்பது கிடையாது.

வேறு மாநிலத்தவர்களுக்கே வேலை கிடைக்கிறது. மத்திய அரசு அந்தந்த மாநில மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே உணவு என்கிற பா.ஜனதா எண்ணம் பலிக்காது. பா.ஜனதாவை பாராளுமன்றத்தில் அதிகமாக விமர்சனம் செய்து பேசியவர் வைகோ.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News