செய்திகள்
தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகைக்காக 26-ந்தேதி விடுமுறை விடப்படுமா?

Published On 2019-10-09 06:26 GMT   |   Update On 2019-10-09 06:26 GMT
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் சனிக்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த முறை ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் தீபாவளி பண்டிகை வருவதால் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

26-ந்தேதி சனிக்கிழமை கூட பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 210 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற விதியின்படி தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26-ந்தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் சனிக்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளியூரில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக வெள்ளிக்கிழமை இரவே பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

26-ந்தேதி சனிக்கிழமை விடுமுறை இல்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ந் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. வெளியூர் செல்பவர்கள் முன்கூட்டியே பயணிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தாமதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக முந்தைய நாளான 5-ந்தேதியும் விடுமுறை தினமாக அரசு அறிவித்தது. இதனால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது.

ஆனால் இப்போது ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருவதால் அன்று ஒரு நாள் மட்டுமே பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, அரசின் பொது விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமையில் தீபாவளி வருகிறது. அதனால் அன்று ஒருநாள் விடுமுறையாகும். சனிக்கிழமை வழக்கமான விடுமுறை நாட்களாகும். அதனால் எப்போதும் போல சனி, ஞாயிறு இரு தினங்கள் விடுமுறையாக கருதப்படுகிறது.

தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை விடப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நோன்பு இருப்பவர்கள் சமயம் சார்ந்த விடுமுறையாக அந்த நாளை எடுத்து கொள்ளலாம்.

பள்ளி கல்வித்துறை சார்பாக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பி.கே.இளமாறன் கூறியதாவது:-

அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு அன்றே வெளியூரில் இருந்து பணிக்கு திரும்புவது மிகவும் சிரமம் ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.

தீபாவளி மறுநாளான திங்கட்கிழமையினை விடுமுறை நாளாக அறிவிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும் 28.10.2019 திங்கட்கிழமையினை ஈடு செய்திடும் பொருட்டு அரசு அறிவிக்கும் ஏதாவது ஒரு விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று பணி செய்து ஈடுசெய்கின்றோம். எனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பரிசீலித்து தீபாவளி மறுநாள் அன்று விடுப்பு வழங்கிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News