செய்திகள்
மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க.வினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் போட்ட போது எடுத்த படம்.

தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்- சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ உறுதி

Published On 2021-01-21 13:18 GMT   |   Update On 2021-01-21 13:18 GMT
தமிழகத்தில் அடுத்து வர உள்ள தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும் என்று சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தனர்.
சிவகாசி:

சிவகாசி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் விஸ்வநத்தம் கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

இந்த கூட்டத்துக்கு இப்பகுதியில் இருந்து பெண்கள் அதிகளவில் வந்த கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் தான் ஆட்சியாளர்களை தீர்மானிக்க போகிறீர்கள்.

இங்கு வந்த பெண்கள் அ.தி.மு.க. ஆட்சியின் பாதிப்பை மற்ற பெண்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

இந்த பகுதியை சேர்ந்தவர் அ.தி.மு.க. அரசில் கடந்த 10 ஆண்டுகளாக மந்திரியாக இருக்கிறார். ஆனால் தொகுதிக்கு அவர் எதுவும் செய்ய வில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்று இன்றே நீங்கள் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். அதற்கு சாட்சி தான் இங்கு கூடி உள்ள பெண்களின் கூட்டம்.

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இனி எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் தான் முதல்-அமைச்சர். அ.தி.மு.க. அரசு தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் ஊழல் தான் அதிகரித்துள்ளது. வளர்ச்சி பணிகள் என்று எதையும் கூற முடியவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாயம் பாதித்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் ஸ்டாலின் மட்டும் தான்.

தேர்தல் வருவதால் பட்டாசு தொழிலுக்கு வாரியம் அமைத்துள்ளது அ.தி.மு.க. அரசு. தி.மு.க. ஆட்சியில் தான் பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தி.மு.க.வினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்.

கூட்டத்தில் தென்காசி எம்.பி. தனுஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் (விருதுநகர்), தங்கபாண்டியன் (ராஜபாளையம்) , வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், நகர பொறுப்பாளர்கள் உதயசூரியன் (திருத்தங்கல்), காளிராஜன் (சிவகாசி), மதர்ஸ் கே.வி.கந்தசாமி, சுக்கிரவார்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம், சாகுல்அமீது, திலிபன்மஞ்சுநாத், வெயில்முத்து, உசிலை தங்கராம், எஸ்.என்.புரம் பாண்டீஸ்வரன், பிரவீன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைகழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் விஸ்வை கணேசன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News