செய்திகள்
கோப்புப்படம்

சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

Published On 2021-06-11 02:06 GMT   |   Update On 2021-06-11 02:06 GMT
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
சென்னை:

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 26 சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. அந்தவகையில் 2020-ம் ஆண்டு நிலவரப்படி, காலியாக இருந்த சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு (2020) மே மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, அக்டோபர் 4-ந்தேதி நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. பொதுவாக இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் முதன்மைத் தேர்வுக்கு அடுத்தபடியாக நடைபெறும் நேர்முகத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால், நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மின் அழைப்பு கடிதம் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும். அதனை https://www.upsc.gov.inhttps://www.upsconline.in என்ற ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags:    

Similar News