ஆன்மிகம்
வடபழனி முருகன் கோவில்

சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது

Published On 2019-09-28 03:18 GMT   |   Update On 2019-09-28 03:18 GMT
சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நாளை முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது.
சென்னை நகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக வடபழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு முருகப்பெருமான் பாத ரட்சையுடன் அருள்பாலிக்கிறார். வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா சக்தி கொலுவுடன் 10 நாள் விழாவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் கோலாகலமாக தொடங்குகிறது.

இந்த ஆண்டு பக்தர்கள் பங்களிப்புடன் கொலு வைக்கப்படுகிறது. இதற்காக, ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொம்மைகள் பக்தர்களால் வழங்கப்பட்டுள்ளன. அதனுடன், கோவில் கொலு பொம்மைகளும் சேர்த்து பிரமாண்ட கொலு வைக்கப்படுகிறது.

நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில், தினமும் காலை 11 மணி முதல், 11.30 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. காலை 11.30 மணி முதல் 12 மணி வரை சிறப்பு பூஜை நடத்தப்படும். தினமும் மாலை, 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீசுக்தம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணமும், மாலை 6.30 மணி முதல் 7 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனையும் நடத்தப்படுகிறது. இரவு 7 மணி முதல் 7.30 மணிவரை பக்தர்களின் கொலுபாட்டு நடக்கிறது.

இது தவிர, தினமும் மாலை 4 முதல் 6 மணி வரை நாட்டிய, இசைக்கச்சேரி நடக்கிறது. இரவு 7 மணிக்கு சொற்பொழிவு நடைபெறும். இதில், பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.

நவராத்திரி விழாவின் சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு வருகிற அக்டோபர் 4-ந் தேதி, காலை 7.30 மணி முதல், 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 8-ந் தேதி, ‘வித்யாரம்பம்’ எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், 2½ வயது முதல் 3½ வயது வரை உள்ள குழுந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை தொடங்கும் நிகழ்வு நடக்க உள்ளது.

மேற்கண்ட தகவல் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News