ஆன்மிகம்
சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில்

சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில்- சிவகங்கை

Published On 2021-11-13 06:26 GMT   |   Update On 2021-11-13 06:26 GMT
இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார்
மூலவர்     –  சுகந்தவனேஸ்வரர்
உற்சவர்     –  சோமாஸ்கந்தர்
அம்மன்     –  சமீபவல்லி
தீர்த்தம்     –  கிணறு
பழமை     –  500-1000 வருடங்களுக்கு முன்
மாவட்டம்     –  சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி. இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது.

சிவகங்கைப் பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி செய்து வந்தபோது, ஒரு போரில் பெரிய வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தார். ஆனால் எந்த இடத்தில் கோவில் அமைப்பது என்பதில் அவருக்கு குழப்பம் இருந்தது. அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், பெரிச்சிக்கோவில் பகுதியைச் சுட்டிக்காட்டி அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கேயே கோவில் அமைக்கும்படியும் கூறினார். அதன்படி அமைந்ததுதான் சுகந்தவனேஸ்வரர் கோவில். வாசனை மலர்கள் நிறைந்த பகுதியில் இந்த இடம் அமைந்த காரணத்தால், இறைவனுக்கு இப்பெயர் வந்தது.

இது பைரவர் வழிபாட்டுத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு அருகில் மூன்று பேர் வணங்கிய நிலையில் உள்ளனர். அதோடு பைரவரின் நாய் வாகனத்தைப் பிடித்தபடி, பாலதேவர் அருள்கிறார். பவுர்ணமி தோறும் மாலை வேளையில் இந்த பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார். இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். பக்தர்கள் பின்புற முகத்தை பார்க்க முடியாது.

அம்பாள் சமீபவல்லிக்கு, தனிச்சன்னதி இருக்கிறது. தன்னை வேண்டுவோர் அருகில் இருந்து காப்பவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். இத்தலத்தின் விருட்சம் வன்னி. கிணற்று நீர் பிரதான தீர்த்தம். அபலைப்பெண் ஒருத்திக்கு, தந்தை ஸ்தானத்தில் இருந்து மணம் முடித்து வைத்த சிவன், அவளை அவளது கணவன் கைவிட்ட போது, வன்னிமரம், கிணறு மற்றும் இலிங்கமாக இருந்து சாட்சி சொன்னார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளது போலவே, இந்த தலத்திலும் கிணறையும், வன்னியையும் காணலாம். பிரகாரத்தில் அருகருகே நான்கு விநாயகர்கள் காட்சி தருகின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியருக்கும் சன்னதி உள்ளது. இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இவர் நவபாஷாண சிலை வடிவில் காட்சி தருவது விசேஷம். இச்சிலையை போகர் பிரதிஷ்டை செய்ததாக சொல்கிறார்கள்.

பிரார்த்தனை:

நோய்கள் நீங்க பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை அணிவித்து, பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

போக்குவரத்து வசதி:

மதுரையில் இருந்து 60 கி.மீ., தூரத்திலுள்ள, திருப்புத்தூர் சென்று அங்கிருந்து 8 கி.மீ., தூரத்திலுள்ள கண்டரமாணிக்கம் செல்ல வேண்டும். இவ்வூரிலிருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். பஸ் வசதி அதிகமில்லை என்பதால் ஆட்டோவில் சென்று வரலாம்.
Tags:    

Similar News