உள்ளூர் செய்திகள்
தேர்வறையில் மின்தடையால் மின்விசிறி ஓடாமல் உள்ளது.

பிளஸ்-2 தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் வகுப்பறைகளில் திடீர் மின்தடை

Published On 2022-05-05 09:56 GMT   |   Update On 2022-05-05 09:56 GMT
தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் வகுப்பறைகளில் திடீர் மின்தடை ஏற்பட்டதால் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியது. தேர்வு நடைபெறுவதால் தடையின்றி குடிநீர், மின்சார வசதி இருக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தஞ்சையில் அரசுப் பள்ளியில் தேர்வு தொடங்கும் போது மின்சாரம் தடை ஏற்பட்டதால் மாணவ, மாணவிகள் அவதி அடைந்தனர். அதன் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாணவர்களுக்கு தேர்வு அறை கண்காணிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வினாத்தாள் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது சிறிது நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டது. ஏற்கனவே கோடைகாலம் என்பதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. திடீரென மின்தடை ஏற்பட்டதால் அறையிலிருந்த முன்விசிறிகள் ஓடவில்லை. மின்விளக்குகள் அணை ந்தன. இதனால் மாணவர்கள்  கடும் அவதி அடைந்தனர். புழுக்கத்தால் பரிதவித்தனர். 

உடனடியாக  பள்ளி நிர்வாகிகள் மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவர்கள் சோதனை செய்தபோது பள்ளிக்கு வரக் கூடிய மின் இணைப்பில் பழுது ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் பிரச்ச னையை சரிசெய்தனர். அதன்பிறகு மின்சாரம் வந்தது.  

இதனை தொடர்ந்து 10 மணி முதல் 10.25 மணி வரை சுமார் 25 நிமிடம் நீடித்த மின்வெட்டு பிரச்சனை சரியாகி நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதன் பிறகு மாணவர்கள் நிம்மதியுடன் தேர்வு எழுதினர். 

இருந்தாலும் அரசின் உத்தரவுப்படி தேர்வு நடைபெறும் நேரங்களில் மின்வெட்டு ஏற்படக்கூடாது என கூறியும் மின்வெட்டு ஏற்பட்டது  எப்படி என கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News