ஆன்மிகம்
திருமங்கலம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் பக்தர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்ட காட்சி.

திருமங்கலம் அருகேகோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம்

Published On 2020-11-01 07:57 GMT   |   Update On 2020-11-01 07:57 GMT
திருமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய ஆடுகள், சேவல்கள் வெட்டப்பட்டு பிரியாணி தயாரிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் சடச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். பொதுமக்கள் தங்களது வேண்டுதலை சடச்சியம்மனிடம் வேண்டிக் கொள்வர். வேண்டுதல் நிறைவேறியவுடன் நடைபெறும் திருவிழாவில் நேர்த்திக் கடனாக ஆடு, சேவல்கள் வழங்குவர். திருவிழா நாளில் அம்மனுக்கு பொங்கலிட்டு ஆடுகள், சேவல்கள் வெட்டி அசைவ பிரியாணி தயார் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கிராம மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் கோவில் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் சடச்சியம்மன் கோவில் திருவிழா நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை நடைபெற்றது. நேற்று மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவிழாவில் கலந்துகொண்ட அம்மாபட்டி, பன்னீர்குண்டு, வலையப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் நேர்த்திக் கடனாக ஆடு, சேவல்களை வழங்கினர். ஆடு, சேவல்களில் முதலில் சக்தி கிடா வெட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய ஆடுகள், சேவல்கள் வெட்டப்பட்டு பிரியாணி தயாரிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது, மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்ற வேண்டி கொள்வோம். நேர்த்திக்கடன் நிறைவேறியவுடன் நடைபெறும் திருவிழாவில் ஆடுகள், சேவல்களை காணிக்கையாக கோவில்களுக்கு வழங்குவோம். பின்னர் இவைகள் அம்மனுக்கு படைக்கப்பட்டு அசைவ பிரியாணி தயார் செய்து பிரசாதமாக வழங்கப்படும். ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஆடம்பரமின்றி எளிமையான முறையில் விழா நடத்தப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற திருவிழாவில் அம்மாபட்டி திருவிழாவும் ஒன்று என தெரிவித்தனர்.
Tags:    

Similar News