ஆன்மிகம்
புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு மருக்கொழுந்து அலங்காரமும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் காணலாம்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் ரத்து

Published On 2020-09-14 07:15 GMT   |   Update On 2020-09-14 07:15 GMT
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோலாட்டமாடி அம்மனை புகழ்ந்து பாடி வழிபாடு செய்தனர்.
தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களுள் ஒன்றாகும். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும். இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆவணி திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் முதல் 2 வாரங்களாக சிறப்பு அலங்காரம் செய்யப்படவில்லை. இந்தநிலையில் முழு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்களை திறக்க தமிழகஅரசு அனுமதி அளித்தது.

இதனால் 3-வது ஞாயிற்றுக்கிழமையான கடந்தவாரம் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அம்மனுக்கு மருக்கொழுந்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிகஅளவில் பக்தர்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கோவிலுக்குள் வரிசையாக செல்வதற்கு வசதியாக இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வரிசையாக கோவிலுக்குள் சென்றனர். கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

அம்மனுக்கு அர்ச்சனை, தீபாராதனை எதுவும் நடைபெறவில்லை. பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்காக தேங்காய், பழங்கள் கொண்டு வந்தனர். ஆனால் அவற்றை கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோவிலின் நுழைவு வாயிலில் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த தேங்காயை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலுக்குள் யாரும் அமருவதற்கு அனுமதி அளிக்கப்படாததால் கோவிலுக்கு வெளியே மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டமாடி, பாட்டுப்பாடி அம்மனை வழிபாடு செய்தனர். ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று தேரோட்டம் நடைபெறும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்தும், விழாக்கள் நடைபெற அனுமதி அளிக்கப்படாததை தொடர்ந்தும் தேரோட்டம் நடைபெறவில்லை. நேற்று பக்தர்கள் வருகையையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News