செய்திகள்
மு.க.ஸ்டாலின்

புதுவையில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

Published On 2021-04-02 23:45 GMT   |   Update On 2021-04-02 23:45 GMT
புதுவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க. 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக புதுவைக்கு வந்த ராகுல்காந்தி பாரதிதாசன் கல்லூரி மாணவிகள், மீனவ சமுதாயத்தினரிடம் கலந்துரையாடினார். மேலும் பொதுக்கூட்டம் ஒன்றிலும் பேசினார்.

பின்னர் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி., திருச்சி சிவா எம்.பி., நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) புதுச்சேரி வருகிறார். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ரோடியர் மில் திடலில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். அப்போது அவர் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கிறார். இதற்காக ரோடியர் மில் திடலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை புதுவை தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News