செய்திகள்
பெங்களூருவில் உள்ள முக்கிய பகுதியான டவுன்ஹால் வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம்.

கர்நாடகத்தில் முழு ஊரடங்கு?: மாநில அரசு பரிசீலனை

Published On 2021-05-07 02:34 GMT   |   Update On 2021-05-07 02:34 GMT
கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை நெருங்கிய நிலையில் கர்நாடகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு :

கொரோனா 2-வது அலையின் பிடியில் கர்நாடகம் சிக்கியுள்ளது. மாநிலத்தில் தினசரி பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. கொரோனா பரவலை தடுக்க கர்நாடக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

ஆனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 6 மணி நேரம் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று அரசு நினைத்து இருந்தது.

ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் புதிய உச்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 50 ஆயிரத்து 112 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். எனவே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுத்த வேண்டும் என்று அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. மாறாக பரவல் மேலும் அதிகரித்துள்ளது. அதனால் கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வரலாம். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 12-ந் தேதி முடிவடைகிறது.

அதன் பிறகு முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசித்து முழு ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தில் இதுவரை 1 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். 18 வயது நிரம்பியவர்களுக்கு வருகிற 15-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்த இருக்கிறோம்.

கொரோனா 3-வது அலை தொடங்குவதற்கு முன்பு அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்ய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளோம்.

தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். 5 மந்திரிகளுக்கு கொரோனா தடுப்பு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த அதிருப்தியும் இல்லை. கொரோனா தடுப்பூசி போடுவது, உயிரிழப்பை தடுப்பது ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறது.

மூத்த மந்திரிகளுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து மந்திரிகளும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்கள். அதனால் மாநிலத்தில் கொரோனா பரவல் விரைவில் கட்டுக்குள் வரும். நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எங்கள் கட்சியை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

நான் ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகே கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இந்த நேரத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. கொரோனா தடுப்பு வீரனை போல் பணியாற்றி வருகிறேன். யார் பற்றியும் நான் தரம் தாழ்ந்து பேச மாடடேன்.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News