உள்ளூர் செய்திகள்
தமிழ் அறிஞர்களுக்கு கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை வழங்கிய முதலமைச்சர் முக ஸ்டாலின்

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 5 நாட்டு பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2022-01-22 08:20 GMT   |   Update On 2022-01-22 08:20 GMT
இலக்கிய செழுமையும், இலக்கண அறிவும் கொண்ட மொழியை உயர்தனை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் அறிஞர்கள் இடையே பல ஆண்டு காலத்துக்கு முன்பே எழுந்தது. அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர்தான் நமது கலைஞர்.
சென்னை:

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார்.

அதன் மூலம் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பு இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழி பெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.

அதனுடன் இந்தியாவிலேயே அதிகபட்சமாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழும், கருணாநிதியின் உருவச்சிலையும் வழங்கப்படும். முதல் முறையாக பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு 2010-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகு 2010 முதல் 2019-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், செம்மொழி விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு சேர்த்து 10 அறிஞர்கள், விருது தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி 2010-ம் ஆண்டுக்கான விருதை பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் வீ.எஸ்.ராஜம் பெறுகிறார். மேலும் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்.கோதண்டராமன் (2011), தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியரும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவருமான இ.சுந்தரமூர்த்தி (2012),

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவன முன்னாள் இயக்குனரும், புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் பதிவாளருமான பேராசிரியர் ப.மருதநாயகம் (2013), சென்னை பல்கலைக்கழக முன்னாள் தலைவர் பேராசிரியர் கு.மோகனராசு (2014),

சென்னை மாநில கல்லூரி முன்னாள் தமிழ் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (2015), புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர் கா.ராஜன் (2016), ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் (2017),

சென்னை புதுக்கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் (2018), தஞ்சாவூர் கரந்தைப் புலவர் கல்லூரி மற்றும் நெல்லை திருவள்ளுவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கு.சிவமணி (2019) ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.



சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில், ‘கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’க்கு தேர்வு செய்யப்பட்ட 10 அறிஞர்களுக்கு விருதினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

‘‘தமிழுக்கு அமுதென்று பேர்... அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’ என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளை நெஞ்சில் ஏந்தி இந்த விழா மேடையில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்.

தமிழ் அறிஞர்களுடைய நூற்றாண்டு கனவை நிறைவேற்றிய தலைவர்தான் கலைஞர். அவருடை பெயரால் அமைந்து இருக்கக்கூடிய ‘செம்மொழி தமிழ் ஆய்வு விருது’கள் அதை விழாவாக, அண்ணா பெயரில் அமைந்து இருக்கக்கூடிய இந்த நூலகத்தில் நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

அண்ணனாகவும், தம்பியாகவும் இருந்து தமிழுக்கு தொண்டாற்றிய 2 பெருமக்களின் நினைவை ஏந்தி இந்த விழா மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். தமிழ் தொன்மையான மொழி என்பதை தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மொழியியல் அறிஞர்கள், இனவியல் அறிஞர்கள் அதை தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் உண்மை இது.

தமிழ், குறிப்பிட்ட மக்கள், பேசும் மொழியாக மட்டும் அல்ல, ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது. நிலத்துக்கு, மண்ணுக்கு, இயற்கைக்கு, மக்களுக்கு, பண்பாட்டுக்கு இலக்கணத்தை வகுத்து இருக்கக்கூடிய மொழி.

தமிழை பேசும்போது இனிமையாக இருக்கிறது. தமிழை கேட்கும்போது இனிமையாக இருக்கிறது. ஏன் தமிழ் என்று சொல்லும் போது இனிமையாக இருக்கிறது. தமிழ் என்றாலே இனிமை என்றுதான் பொருள்.

தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. தமிழ் எந்த மொழியில் இருந்தும் கடன்வாங்கி உருவான கிளை மொழி அல்ல. தமிழில் இருந்துதான் ஏராளமான மொழிகள் உருவாகி இருக்கின்றன. பல மொழிகளை உருவாக்கும் திறன் கொண்ட மொழிதான் நமது தாய்மொழியான தமிழ்.

தமிழ், தமிழரசி, தமிழரசன் என்ற மொழியின் பெயரையே பெயராக வைத்துக் கொள்வது நம் இனத்திலே இருக்கிறது. மொழி காக்க உயிரை தந்த தியாகிகளை பெற்ற மொழியும் நம் தமிழ் மொழி ஆகும்.

இலக்கிய செழுமையும், இலக்கண அறிவும் கொண்ட மொழியை உயர்தனை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் அறிஞர்கள் இடையே பல ஆண்டு காலத்துக்கு முன்பே எழுந்தது. அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர்தான் நமது கலைஞர்.

2004-ம் ஆண்டு அக்டோபர் 14-ந்தேதி ஒன்றிய அரசால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அன்றைய ஒன்றிய அரசால் 2007-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

தொடக்கத்தில் இந்த நிறுவனம் மைசூரில் செயல்பட்டது. 2008-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி சென்னைக்கு இந்த நிறுவனம் மாற்றப்பட்டு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அப்போதுதான் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என்று பெயர் சூட்டப்பட்டது.

இதற்கு காரணமாக இருந்தவர் கலைஞர். சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத்தை 2008-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி கலைஞர் திறந்து வைத்தார். செம்மொழி நிறுவனத்துக்கென தனியாக ஒரு கட்டிடம் அமைய வேண்டும் என்று கலைஞர் ஆசைப்பட்டார்.

அதற்காக 2007-ம் ஆண்டு நவம்பர் 5-ம் நாள் சென்னை பெரும்பாக்கத்தில் 16 ஏக்கர் நிலத்தை வழங்கினார். சுமார் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை சமப்படுத்தி வழங்கினோம்.

அந்த இடத்தில் ரூ.24 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றிய அரசு கட்டிடம் அமைத்து தந்திருக்கிறது. கடந்த 12-ந்தேதி அந்த கட்டிடத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். காணொலி மூலம் நடந்த அந்த விழாவுக்கு நான் முன்னிலை வகித்து பேசியபோது குறிப்பிட்டு சொன்னேன்.

இந்திய பிரதமர் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து இருக்கிறார். அதற்காக தமிழ்நாட்டு மக்களின் சார்பில், அரசின் சார்பில், தனிப்பட்ட என் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு சொன்னேன்.

தலைவர் கலைஞர் இன்று இருந்திருந்தால், மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். தமிழர் திருநாளான பொங்கல் அன்று தமிழுக்கு இத்தகைய சிறப்பு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுக் காட்டி இருப்பார்.

அதன் பிறகே நானும், அமைச்சர் தங்கம் தென்னரசு பெரும்பாக்கம் சென்று தமிழாய்வு நிறுவனத்தை பார்வையிட்டோம். உண்மையிலேயே மிகவும் சிறப்பாக அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தொடக்கம் முதல் இன்று வரை இதன் வளர்ச்சிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. தொல் பழங்காலம் முதல் கி.பி.6-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிக்குள் தோன்றி இருக்கக்கூடிய இலக்கணம், அது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டு இருக்கக் கூடிய நிறுவனம் இந்த நிறுவனம்.

தமிழ் மொழி ஆய்விலும் அதன் மேம்பாட்டிலும் தனிகவனம் செலுத்தி வருகிறது. செம்மொழி தமிழின் தொன்மையையும், தனித்தன்மையையும் அவற்றின் மரபு தொடர்ச்சியையும் ஆராய்ந்து பாதுகாப்பதே முக்கிய நோக்கமாக இந்த நிறுவனம் கருதி கொண்டு இருக்கிறது.

அந்த வரிசையில் செம்மொழி தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு 2008-ம் ஆண்டு ஜூலை 24-ந் தேதி தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடியை கலைஞர் வழங்கினார்.

‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் அறக்கட்டளை’ என்ற பெயரால் ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அந்த அறக்கட்டளை சார்பில் தகுதிசால் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று கலைஞர் விரும்பினார். இந்தியாவிலேயே மிக உயரிய விருதாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகை கொண்ட இந்த விருதுடன், பாராட்டு சான்றிதழ், கலைஞர் உருவம் பொறித்த நினைவுப்பரிசும் வழங்கப்படும்.

நமது தமிழகத்துக்கு தமிழ்நாடு அரசு என்று மொழியின் பெயரால் பெயர் சூட்டியது தி.மு.க. ஆட்சி. தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுவி அதனை மாநில பாடலாக்கியது தி.மு.க. ஆட்சி.

இந்தநிலையில் சில அறிவிப்புகளை வெளியிட இருக்கிறேன். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் இணைப்பு சாலை இனி ‘செம்மொழி சாலை’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

செம்மொழி சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில் முதல்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. செம்மொழி நிறுவனம் முன் வைத்திருக்கக் கூடிய இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். விருது பெற்ற தமிழ் அறிஞர்கள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன்.

உங்களுக்கு விருது வழங்கியதன் மூலமாக செம்மொழி நிறுவனம் பெருமைப்படுகிறது. நானும் பெருமை அடைகிறேன். தமிழ்நாடு அரசும் பெருமை அடைகிறது.

இந்த விருதின் மூலமாக தமிழ் மொழி மேலும் சிறப்படைய பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை நீங்கள் தொடங்க வேண்டும்.

பழமைக்குப் பழமையாய் புதுமைக்கு என்றும் புதுமையாய் இருக்கக்கூடிய மொழி நம்முடைய தமிழ் மொழி. இந்த மொழி குறித்த ஆய்வுகள் தமிழ்நாட்டோடு, இந்திய எல்லையோடு முடிந்து விடாமல் உலகளாவியதாக அமைய வேண்டும். உலக மொழியியல் கோட்பாடுகளை உள்ளடக்கியதாக நமது ஆய்வுகள் அமைய வேண்டும்.

மொழியை ஒரு பண்பாடாகச் சொல்வது உலக மரபாகவே உள்ளது.

’நோம்சாம்ஸ்கி’ போன்ற உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள், மொழியை மூளையின் ஓர் உறுப்பு என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். “குழந்தையின் மூளைக்குள் ஒரு மொழியறிவு இருக்கிறது, இது மனித இனத்துக்கே உரியது” என்று அவர் சொல்கிறார்.

'தமிழ் எங்கள் இளமைக்குப் பால்' என்று எப்போதோ சொல்லிவிட்டார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். உங்களது ஆய்வுகள் அறிவுப் பூர்வமானதாக மட்டுமில்லாமல் உணர்வுப் பூர்வமானதாகவும் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் தேடி வரக்கூடிய இடமாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிச்சயமாக மாறும். அப்படி உயர்ந்து நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்று பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் தொலை நோக்குப் பார்வையோடு நடைபோடும் நமது அரசு, தமிழை ஆட்சிமொழியாகவும் வழக்காடு மொழியாகவும் மேலும் உயர்த்திட தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதைக் கூறி, தமிழ் வாழ்க. செம்மொழித் தமிழ் வாழ்க.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News