செய்திகள்
கோப்பு படம்

“தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் எண்ணம் இல்லை” - அயோத்தி தீர்ப்புக்கு சன்னி வக்பு வாரியம் வரவேற்பு

Published On 2019-11-09 23:54 GMT   |   Update On 2019-11-09 23:54 GMT
அயோத்தி தீர்ப்புக்கு சன்னி வக்பு வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் எண்ணம் இல்லை என்று அந்த வாரியத்தின் தலைவர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியானதும் வழக்கின் முக்கிய மனுதாரரான சன்னி மத்திய வக்பு வாரியத்தின் வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி அதிருப்தி தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “அயோத்தி தீர்ப்பில் நிறைய முரண்பாடுகள் உள்ளது. தீர்ப்பில் எங்களுக்கு திருப்தி இல்லாததால் மறுஆய்வு செய்யக்கோருவோம். அனைவரும் அமைதி காக்க வேண்டும், போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம். இதற்கு சட்டரீதியாக உள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

ஆனால் பின்னர் உத்தரபிரதேசத்தில் உள்ள சன்னி மத்திய வக்பு வாரிய தலைவர் ஜாபர் அகமது பரூக்கி அயோத்தி தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு செய்யக்கோரும் எண்ணம் எதுவும் வாரியத்துக்கு இல்லை. இப்போதைக்கு இந்த தீர்ப்பு விவரத்தை முழுமையாக படித்துப்பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். அதன்பின்னர் வாரியம் சார்பில் விரிவான அறிக்கை அளிக்கப்படும். எந்த வக்கீலோ அல்லது வேறு எந்த நபரோ தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோருவோம் என்று கூறியிருந்தால் அதனை சரியானது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி வக்கீல் ஜிலானியிடம் கேட்டபோது, “அகில இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அந்த வாரியத்தின் செயலாளர் என்ற முறையில் தான் நான் கருத்து தெரிவித்தேன். சன்னி வக்பு வாரியத்தின் வக்கீலாக அல்ல” என்று விளக்கம் அளித்தார்.
Tags:    

Similar News