செய்திகள்
நெல்லையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

மழையால் சேதமடைந்த ரேஷன் கடைகளை மாற்றக்கோரி நெல்லையில் பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-11-22 13:14 GMT   |   Update On 2020-11-22 13:14 GMT
மழையால் சேதம் அடைந்த ரேஷன் கடைகளை மாற்றக்கோரி நெல்லையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை செல்வி நகரில் ஒரு ரேஷன் கடை அமைந்துள்ளது. அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் மேலும் சேதம் அடைந்துள்ளது. கட்டிட விரிசல் வழியாக மழை தண்ணீர் புகுந்து சீனி மூட்டைகள், அரிசி மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

இதை அறிந்த அதிகாரிகள் நேற்று ரேஷன் கடைகளை பார்வையிட வந்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன், அ.தி.மு.க. அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையை அருகில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரி கட்டிடத்துக்கு மாற்றுவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், சாலைத்தெருவில் அமைந்துள்ள மற்றொரு ரேஷன் கடையிலும் பாதிப்பு உள்ளது. எனவே அந்த கடையையும் ஆஸ்பத்திரி கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “5-வது வார்டு சிந்துபூந்துறையில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது பெய்த மழையால் ரேஷன் கடைகளில் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் உள்ளே புகுந்து அத்தியாவசிய பொருட்கள் மழை நீரில் நனைந்து நாசமாகி விட்டது.

இது தொடர்பாக தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தார். இந்த 2 கடைகளையும் அருகில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது“ என்று கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News