உண்மை எது
உக்ரைனில் இருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள்

உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வர நிதியுதவி செய்ததா தமிழக அரசு?

Published On 2022-03-09 12:18 GMT   |   Update On 2022-03-09 12:18 GMT
ரோமானியா எல்லையில் இருந்து 35 மாணவர்களை அழைத்து வர தமிழக அரசு நிதி உதவி செய்ததாக வெளியான செய்தி உண்மை இல்லை என பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது உண்மை தெரிய வந்துள்ளது.
ரஷியா- உக்ரைனுக்கு எதிரான போர் தொடர்ந்து 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரின்போது உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை காப்பாற்ற இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த மார்ச் 4-ம் தேதி ரோமானியா எல்லையில் இருந்து 35 இந்திய மாணவர்களை அழைத்து வர தமிழக அரசு நிதியுதவி செய்ததாக ட்விட்டரில் பிரபல செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் அந்த செய்தியை பகிர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தலைமை ஆலோசகர் கஞ்சன் குப்தா இந்த செய்தி உண்மை இல்லை என சாடியிருந்தார்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரோமானிய எல்லையில் இருந்த 35 மாணவர்களை காப்பாற்ற தலா ரூ.38,000 என 35 பேருக்கு போக்குவரத்து செலவை தமிழக அரசு ஏற்றதாக தெரியவந்துள்ளது.

மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது உண்மைதான், ஆனால் 35 மாணவர்களுக்கு தமிழக அரசு தான் நிதியுதவி செய்தது என திமுகவின் என்.ஆர்.ஐ பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இவற்றை உக்ரைனில் மாணவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்த மருத்துவர் விஜயகுமார், தமிழக அரசின் புலம்பெயர் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் ஜசிந்த லசாரஸ் ஐ.ஏ.எஸ் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட 35 மாணவர்களில் ஒருவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், 3 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. 
Tags:    

Similar News