செய்திகள்
டிராக்டரில் வரும் விவசாயிகள்

நாளை மறுநாள் பிரமாண்ட பேரணி... 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைகின்றன

Published On 2021-01-24 08:46 GMT   |   Update On 2021-01-24 08:46 GMT
டெல்லியில் நாளை மறுநாள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர்.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்மை சட்டங்களை வாபஸ்பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2 மாத காலமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இறுதியாக நேற்று முன்தினம் 11-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

3 வேளாண்மை சட்டங்களையும் 1½ஆண்டு நிறுத்தி வைக்க மத்திய அரசு முன்வந்தது. அதையும் விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர். 3 சட்டங்களையும் வாபஸ் பெற்றே தீர வேண்டும் என்று விவசாயிகள் பிடிவாதமாக உள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் வருகிற 26ந்தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிராமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

டெல்லியில் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பில் செங்கோட்டையில் விழா நடைபெறும். அதைத் தொடர்ந்து டெல்லி ராஜபாதையில் பிராமாண்ட அணிவகுப்பு நடைபெறும். இதற்கு போட்டியாக விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்திருந்தனர்.

இதனால் குடியரசு தின விழாவுக்கு இடையூறு ஏற்படும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப் பட்டது.

இதனால் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிட மறுத்துவிட்டது. டெல்லி போலீசாரே இது சம்பந்தமாக முடிவு செய்து கொள்ளலாம் என்று கோர்ட்டு கூறிவிட்டது.

எனவே இது சம்பந்தமாக டெல்லி போலீசார் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். டெல்லிக்கு வெளியே பேரணியை நடத்திக்கொள்ளுங்கள் டெல்லி நகருக்குள் அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறினார்கள்.

ஆனால் விவசாயிகள் டெல்லி நகருக்குள்தான் பேரணியை நடத்துவோம் என்று பிடிவாதமாக கூறினார்கள். முதலில் அரசு குடியரசு தின பேரணி நடைபெறும் ராஜபாதையிலேயே டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

பின்னர் அதை டெல்லி ரிங்ரோடு பகுதிக்கு மாற்றுவதாக விவசாயிகள் அறிவித்தனர். ஆனாலும் டெல்லி நகருக்குள் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறிவந்தனர்.

விவசாயிகள் டெல்லி நகரை தவிர வேறு எங்கும் பேரணி நடத்த முடியாது என்று உறுதியாக கூறி விட்டனர்.

விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று டெல்லி போலீசார் 5-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுத்தனர். எந்த வழியாக பேரணி செல்ல வேண்டும் என்பது தொடர்பாக இன்று போலீசார் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பிறகு பேரணி வழிகள் பற்றி தெரிவிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

போலீஸ் அனுமதியை அடுத்து சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது எவ்வளவு தூரத்துக்கு பேரணி நடத்துவது, எந்த வழியாக பேரணி செல்வது என்று முடிவு செய்தனர்.

அதன்படி தற்போது விவசாயிகள் முகாமிட்டு இருக்கும் காசிப்பூர், சிங்கு, திக்ரி 3 எல்லைகள் வழியாக டெல்லிக்குள் நுழைவது. அதன்பிறகு 5 முனைகளில் இருந்தும் பேரணியை தொடங்குவது என்று முடிவு செய்தனர்.

சிங்கு, திக்ரி, காசிப்பூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய 5 முனைகளில் இருந்தும் டிராக்டர்கள் டெல்லி நகருக்குள் செல்லும்.

மொத்தம் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ நடைபெறும் என்று விவசாயிகள் சங்க தலைவர் யோகேந்திர யாதவ் கூறினார்.

மேலும் விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறிய தாவது:-

இந்த பேரணியில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும். முதலில் இருந்ததைவிட இப்போது விவசாயிகள் எழுச்சியாக போராட்டத்தில் கலந்துகொண்டு வருகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.

இதனால் போராட்டத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட போராட்டத்துக்கு வரும் டிராக்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

டிராக்டர் பேரணி எவ்வளவு நேரம் நடக்கும் என்பதை சொல்ல முடியாது. 24 மணிநேரத்தில் இருந்து 72 மணிநேரம் வரை பேரணி நீடிக்க வாய்ப்பு உள்ளது.

பேரணியை ஒழுங்குபடுத்தவும், தேவையான உதவிகளை செய்யவும் 2,500 தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளனர். பேரணியை வழிநடத்த கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்படுகிறது.

டிராக்டர் பேரணி மிக அமைதியான முறையில் நடைபெறும். எந்த வன்முறைக்கும், தவறுகளுக்கும் இடம் இருக்காது. டிராக்டர்களில் விவசாயிகள் சங்க கொடி மற்றும் தேசிய கொடி கட்டப்பட்டு இருக்கும். வேறு கொடிகளுக்கு அனுமதி இல்லை.

பேரணியில் பங்கேற்போர் விவசாயிகள் வாழ்க, விவசாயிகள் இல்லை என்றால் உணவு இல்லை, 3 சட்டங்களை ரத்து செய், ஆகிய கோ‌ஷங்களை மட்டுமே எழுப்ப வேண்டும். போராட்டத்தில் பெண்களும் பெருமளவு பங்கேற்பார்கள்.

பேரணி முடிந்ததும் அனைத்து டிராக்டர்களும் எல்லை பகுதிக்கு திரும்பி விடும். டெல்லி நகருக்குள் யாரும் இருக்க மாட்டோம். பழைய முகாம்களுக்கே வந்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News