செய்திகள்
பரம் பீர் சிங்

நான் இந்தியாவில்தான் இருக்கிறேன்: விசாரணைக்கு ஆஜராக தயார்- மும்பை முன்னாள் கமிஷனர் கோர்ட்டில் தகவல்

Published On 2021-11-22 08:21 GMT   |   Update On 2021-11-22 08:21 GMT
மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சி.பி.ஐ. முன் ஆஜராக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தொழில் அதிபரான முகேஷ் அம்பானி வீட்டின் முன் மர்ம கார் ஒன்று நின்றிருந்தது. அந்த காரை பரிசோதனை செய்தபோது, காரில் வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அப்போது போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் சிக்கினார்.

இந்த விவகாரத்தில் மும்பை போலீஸ் மீது குற்றம்சாட்டிய மகாராஷ்டிரா அரசு, கமிஷனராக இருந்த பரம் பீர் சிங்கை மாற்றம் செய்தது. இதனால் கோபம் அடைந்த பரம் பீர் சிங், மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மாதந்தோறும் 100 கோடி ரூபாய் மாமூல் வசூல் வேட்டை நடத்தி தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார் என முதல்வருக்கு பரபரப்பு கடிதம் எழுதினார்.

இதனால் மிரட்டி பணம் பறித்ததாக அனில் தேஷ்முக் மீது மத்திய விசாரணை அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தேஷ்முக் தற்போது ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் பரம் பீர் சிங் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தது. மகாராஷ்டிரா போலீசார் பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் தான் கைது செய்யப்படுவோம் என அறிந்த பரம் பீர் சிங், விடுமுறை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்.

நாங்கள் தேடிப்பார்த்து பரம் பீர் சிங்கை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதனால் மகாராஷ்டிர மாநில நீதிமன்றம் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என அறிவித்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பரம் பீர் சிங் சார்பில், அவரது வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ‘‘நான் இந்தியாவில்தான் உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து என்பதால், எனது முகத்தை மறைத்துள்ளேன். இன்னும் 48 மணி நேரத்திற்குள் சி.பி.ஐ. முன் ஆஜராக தயாராக இருக்கிறேன். நான் தவறு செய்திருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம்’’ என குறிப்பிட்டிருந்தார்.

எஸ்.கே. கவுல் தலைமையிலான பெஞ்ச் அவரது மனுவை விசாரித்து, ‘‘பரம் பீர் சிங்கை கைது செய்யக்கூடாது, விசாரணை அமைப்பு முன் ஆஜராக வேண்டும். நீதிமன்றம் அவரது மனுவை விசாரிக்க ஏற்றுக்கொண்டது’’ எனக் கூறி, இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசுக்கும், சி.பி.ஐ.-க்கும் நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
Tags:    

Similar News