செய்திகள்
கோப்புபடம்

சென்னையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ‘திடீர்’ பிரசவம் - கவச உடையின்றி டாக்டர்கள் குழு சிகிச்சை

Published On 2021-04-05 04:13 GMT   |   Update On 2021-04-05 04:13 GMT
சென்னையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. தாய்-சேயின் உயிரை காப்பாற்ற கவச உடை கூட அணியாமல் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
சென்னை:

சென்னை ஐ.சி.எப். பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 27 பெயர் மாற்றப்பட்டுள்ளது). நிறைமாத கர்ப்பிணியான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். கர்ப்பிணியான அவரை அங்குள்ள டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அமுதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே பிரசவ வலி அதிகமாக அமுதா வலியால் துடித்தார். தகவல் அறிந்து ஆஸ்பத்திரியின் மகப்பேறு துறை மருத்துவர் டாக்டர் பிரியங்கா தலைமையிலான குழுவினர் கொரோனா வார்டுக்கு ஓடோடி வந்தனர். அங்கு அமுதாவின் நிலை கண்டு பதறி போனார்கள். ஏனெனில் எந்த நேரம் வேண்டுமானாலும் குழந்தை பிரசவிக்கலாம் என்ற நிலையில் அமுதா துடித்து கொண்டிருந்தார்.

இதையடுத்து இனி கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்கு செல்லும் முன்பு, எது வேண்டுமானாலும் நிகழலாம்? என்று அச்சப்பட்ட மருத்துவ குழுவினர் உடனடியாக களத்தில் இறங்கினர். எந்த வித கவச உடையும் அணியாமல் உடனடியாக அமுதாவுக்கு சிகிச்சை அளித்தனர். சில நிமிடங்களிலேயே அமுதாவுக்கு சுக பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அனைவரும் பதறி போனார்கள். இதையடுத்து டாக்டர்கள் குழந்தையின் வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தினர். சில வினாடிகளிலேயே குழந்தை அசைந்து, பின்னர் அழத்தொடங்கி அனைவருக்கும் இன்ப பெருமூச்சை ஏற்படுத்தியது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. குழந்தை தனி வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

உரிய நேரத்தில் தாயையும், சேயையும் காப்பாற்ற தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கவச உடையும் அணியாமல் மருத்துவ குழு சிகிச்சை அளித்திருக்கிறது. கொரோனா காலத்தில் கிட்ட நின்று பேசவே சங்கடப்படும் சூழலில், சேவையே பிரதானம் என்ற நிலையில் மருத்துவ குழு செயல்பட்டு, மருத்துவத்துறைக்கு மேலும் ஒரு மணிமகுடத்தை சேர்த்திருக்கிறது. மருத்துவ குழுவினருக்கு தெற்கு ரெயில்வே உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

Similar News