செய்திகள்
நிதிஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான்

நிதிஷ் குமார் கட்சிக்கு எதிராக லோக்ஜனசக்தி களம் இறங்குகிறதா?: ராம்விலாஸ் பஸ்வான் விளக்கம்

Published On 2020-09-12 03:19 GMT   |   Update On 2020-09-12 03:19 GMT
விரைவில் நடக்க உள்ள பீகார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு எதிராக களம் இறங்கவும், 143 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்கவும் ராம்விலாஸ் பஸ்வானுக்கு கட்சி அங்கீகாரம் அளித்துள்ளது.
புதுடெல்லி :

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி அங்கம் வகிக்கிறது. ஆனால் இந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சிக்கு தலைவராக உள்ள அவரது மகன் சிராக் பஸ்வான், மண்ணின் மைந்தன் கொள்கையை (‘பீகாரில் பீகாரிகளுக்கு முதல் உரிமை’) கடந்த மார்ச் மாதம் கையில் எடுத்தது, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதாளத்தால் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படுகிறது. அது முதல் இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

பஸ்வான்களுக்கு போட்டியாக ஜிதான் ராம்மஞ்சியை கூட்டணிக்கு நிதிஷ் குமார் கொண்டு வர முடிவு எடுத்தது இரு தரப்பு உறவில் மேலும் கசப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் விரைவில் நடக்க உள்ள பீகார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு எதிராக களம் இறங்கவும், 143 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்கவும் ராம்விலாஸ் பஸ்வானுக்கு கட்சி அங்கீகாரம் அளித்துள்ளது. இதையொட்டி ராம்விலாஸ் பஸ்வான் தனது கருத்துக்களை டுவிட்டர் பதிவுகளின் மூலம் நேற்று வெளிப்படுத்தினார். அவற்றில் அவர் விளக்கமாக கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நெருக்கடியிலும் நான் உணவு மந்திரியாக நாட்டுக்கு சேவை செய்தேன். இந்த நேரத்தில் எனது உடல்நிலை மோசம் அடைய தொடங்கியது. வேலையில் குறைபாடில்லை என உறுதி செய்யும்வகையில் ஆஸ்பத்திரிக்குகூட போகவில்லை. ஆனால் மகன் சிராக் வலியுறுத்தியதின்பேரில் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறேன். என் மகன் சிராக், என்னோடு இருப்பதில் மகிழ்ச்சி. என்னை அவர் நன்றாக கவனித்துக்கொள்கிறார். அத்துடன் கட்சி பொறுப்புகளையும் அவர் நிறைவேற்றி வருகிறார். அவரது இளமையான சிந்தனையில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சிராக் கட்சியை வழி நடத்துவார், பீகாரை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வார். சிராக்கின் அனைத்து முடிவுகளிலும் (சட்டசபை தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில்) நான் உறுதியாக நிற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News