செய்திகள்
வரிசையில் நின்ற பெண்ணிடம் குறை கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வரிசையில் நின்ற மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்ட முதலமைச்சர்

Published On 2021-10-05 08:10 GMT   |   Update On 2021-10-05 09:40 GMT
சென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வழக்கம் போல் கோட்டைக்கு சென்றார்.

தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறையில் இருந்து திடீரென கீழே இறங்கி தரை தளத்தில் இருந்த முதல்- அமைச்சரின் தனி பிரிவுக்கு நடந்து சென்றார்.

அப்போது அங்கு ஏராளமான பொதுமக்கள் தனிப்பிரிவில் மனு கொடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒருவர் தனது மகன் காணாமல் போனதாக புகார் கொடுக்க வந்ததாக தெரிவித்தார்.



புகார் கொடுக்க வந்தவரிடம் உங்களது வீடு எந்த ஏரியாவில் உள்ளது, எப்போது காணாமல் போனார் என்று விசாரித்தார். உடனடியாக அவரது மனுவை சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு அனுப்ப சொல்லி காணாமல் போன நபரை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் தனிப்பிரிவில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சிறிது நேரம் அங்கு ஆய்வு செய்து விட்டு அதன் பிறகு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News