வழிபாடு
பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2021-12-06 05:58 GMT   |   Update On 2021-12-06 05:58 GMT
கோவில் நுழைவுவாயில் பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்யப்பட்டு பக்தர்கள் அனுப்பப்பட்டனர். மேலும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகளும் தீவிர சோதனை செய்யப்பட்டது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் உள்ளது. இங்கு தினமும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் பழனி முருகன் கோவிலுக்கு அதிகளவில் வருகின்றனர். இதனால் பழனி முருகன் கோவில் மற்றும் அடிவார பகுதிகளில் காலை, மாலைவேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

எனவே அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. மேலும் பொது, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் பெருமளவில் கூடி இருந்தனர். இதனால் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

பாபர் மசூதி இடிப்புதினத்தை முன்னிட்டு நேற்று பழனி முருகன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. குறிப்பாக தங்ககோபுரம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவில் நுழைவுவாயில் பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்யப்பட்டு பக்தர்கள் அனுப்பப்பட்டனர். மேலும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகளும் தீவிர சோதனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News