செய்திகள்
தி.மு.க. பிரமுகர்களையும், சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுகளையும் படத்தில் காணலாம்.

நாங்குநேரியில் ரூ.2.78 லட்சம் பணம் பறிமுதல்: தி.மு.க. எம்எல்ஏ மீது மேலும் ஒரு வழக்கு

Published On 2019-10-20 11:22 GMT   |   Update On 2019-10-20 11:22 GMT
மூலைக்கரைப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற தி.மு.க. எம்எல்ஏ மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:

நாங்குநேரி சட்டசபை தொகுதி பிரசாரத்திற்காக மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில் பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்கி இருந்தனர். அப்போது அவர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்களுக்கு, ஓட்டுப்போட பணம் கொடுக்க முயன்றதாக செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சென்று சரவணக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அவருடன் இருந்த சிலரை தாக்கி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை செய்தனர். 

அப்போது சிதறி கிடந்த ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் மூலக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுடலைக்கண்ணு கொடுத்த புகாரின் பேரில், சரவணக் குமார் எம்.எல்.ஏ. மற்றும் 5 பேரை தாக்கியதாக ஆயர்குளம் கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது ஆயர்குளம் கிராமத்தை சேர்ந்த தமிழன் ராஜா (33) என்பவர் மூலக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் எங்கள் கிராமத்திற்கு சரவணக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் 8-க்கும் மேற்பட்டவர்கள் வந்து ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்றதை நாங்கள் செல்போனில் படம் எடுத்தோம். அப்போது அவர்கள் எங்களை அவதூறாக பேசி சாதியை சொல்லி திட்டி மிரட்டினார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சரவணக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் 8-க்கும் மேற்பட்டவர்கள் மீது தீண்டாமை பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்று மிரட்டியதாக 294 (பி), 323, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
Tags:    

Similar News