இந்தியா
ரெயில்

ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை- 3 நாட்களுக்கு 95 விரைவு ரெயில்கள் ரத்து

Published On 2021-12-02 10:39 GMT   |   Update On 2021-12-02 10:39 GMT
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்:

அந்தமான் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மெல்ல அது மேற்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. பின்னர் அது, வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக  வலுப்பெறும். அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 

பின்னர், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலின் மத்திய பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி காலையில் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை அடைய வாய்ப்புள்ளது" என கூறப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இதனால், அந்த மார்க்கமாக செல்லும் 95 எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்கள் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அறிவித்துள்ளது. 

இன்று முதல் டிசம்பர் 4ம் தேதி வரை இந்த உத்தரவு நடைமுறையில்  இருக்கும் என்றும் பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News