செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

10 கோவில்களில் மருத்துவ முதலுதவி மையங்கள்- ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம்

Published On 2021-10-21 10:20 GMT   |   Update On 2021-10-21 10:20 GMT
திருச்செந்தூர், பழனி, திருத்தணி, திருவண்ணாமலை உள்பட 10 கோவில்களில் முதலுதவி மையங்கள் தொடங்க முதல்கட்ட ஆரம்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை:

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.

முக்கியமாக அறம் சார்ந்த பணிகள், பள்ளி, கல்லூரிகள், சமயம் சார்ந்த பள்ளிகள், கருணை இல்லங்கள், அன்னதானக்கூடங்கள், சமய நூலகங்கள், தங்கும் விடுதிகள், அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிப்பள்ளிகள் தவில், நாதஸ்வர இசைப் பள்ளிகள் போன்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 கோவில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மையங்கள் ரூ. 10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி பழனி தண்டாயுத பாணி சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மேல்மலையனூர் அங்காள பரமேசுவரி கோவில் ஆகிய கோவில்களில் முதலுதவி மையங்கள் தொடங்க முதல்கட்ட ஆரம்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மையங்களில் 2 மருத்துவர், செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள் ஒப்பந்தகால அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News