செய்திகள்
டிரம்ப்-கிம் ஜாங் அன்

டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா

Published On 2020-07-11 03:56 GMT   |   Update On 2020-07-11 03:56 GMT
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக டிரம்ப்-கிம் ஜாங் அன் இந்த ஆண்டு சந்தித்து பேச வாய்ப்பில்லை என வட கொரியா தெரிவித்துள்ளது.
பியாங்யாங் :

உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன், டிரம்புக்கு உறுதி அளித்தார்.

இதையடுத்து, இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை அடியோடு நிறுத்தியது.

இதற்கு கைமாறாக அமெரிக்கா தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப்பெறவேண்டும் என வடகொரியா எதிர்பார்த்தது. ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்தது.

இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வியட்னாமில் 2வது முறையாக சந்தித்து பேசியபோதும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதன் காரணமாக இரு நாடுகளின் உறவில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. எனினும் அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் இடையே விரைவில் 3வது சந்திப்பு நடைபெறும் என அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் வட கொரியா இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு டிரம்ப்- கிம் ஜாங் அன் இடையே சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லை என கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

மேலும் உயர் மட்ட பேச்சு வார்த்தைக்கு ஈடாக அமெரிக்கா வடகொரியாவுக்கு எந்த வெகுமதியையும் வழங்காதபோது கிம் ஜாங் அன்னும் அதை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் கிம் யோ ஜாங் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 2 உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான முடிவை பொறுத்து ஆச்சரியமான விஷயம் இன்னும் நடக்கக் கூடும். இரு நாட்டு தலைவர்கள் இடையே நேரடி சந்திப்பு தேவைப்பட்டால், அது அமெரிக்காவின் தேவை. வடகொரியாவை பொறுத்தவரை அது நடைமுறைக்கு மாறானது. அதை எங்களுக்கு எந்த பலனையும் தராது“ என தெரிவித்துள்ளார்.

மேலும் “மீளமுடியாத இந்த சமயத்தில் அமெரிக்கா வழங்கும் வெகுமதிகளே இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவை காப்பாற்றும். அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது சாத்தியமில்லாத ஒன்று அல்ல என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதனால் நாங்கள் சொல்வது என்னவென்றால் இந்த நேரத்தில் அது சாத்தியமில்லை“ எனவும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News