செய்திகள்
கோப்புப்படம்

திருமணம் என்பது புனிதமானது : கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் - ஐகோர்ட்டு அறிவுரை

Published On 2021-06-01 19:44 GMT   |   Update On 2021-06-02 01:59 GMT
தற்போதைய தலைமுறையினர், திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல, அது ஒரு புனிதமான பந்தம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.
சென்னை:

திருமணம் என்பது புனிதமானது. கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை டாக்டர் சசிகுமாருக்கு எதிராக அவரது மனைவி இந்துமதி குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு சேலம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கைச் சுட்டிக்காட்டி, சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்து கால்நடைத் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சசிகுமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்துமதிதான் என்னை துன்புறுத்தினார். என்னைவிட்டு பிரிந்து சென்றார். அதனால் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். அதில் தீர்ப்பு வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பு, என்னை துன்புறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக புகார் செய்துள்ளார்.



அதனடிப்படையில் என்னை பணியிடை நீக்கம் செய்த இயக்குனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் சசிகுமார், அவரது மனைவிக்கு விவாகரத்து வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சேலம் குடும்பநல கோர்ட்டு தீர்ப்பளித்துவிட்டது. அப்படி இருக்கும்போது, சசிகுமாரை பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை.

இப்போது சசிகுமார் தொடர்ந்துள்ள இந்த வழக்குக்கு பதிலளிக்க இந்துமதிக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்கீழ் மனுதாரர் குற்றவாளியா, நிரபராதியா என்பதை கீழ் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.

சசிகுமாரை துன்புறுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் மனைவிக்கு எதிராக இதுபோன்ற கணவர்கள் புகார் செய்ய வழி இல்லாதது துரதிர்ஷ்டவசமானது.

தற்போதைய தலைமுறையினர், திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல, அது ஒரு புனிதமான பந்தம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தான் என்ற அகந்தை (ஈகோ), சகிப்பு தன்மையின்மை ஆகியவை காலில் போடும் செருப்புகள் போன்றது. கணவனும் மனைவியும் இந்த செருப்புகளை வீட்டுக்குள் வரும்போது வெளியே விட்டுவிட வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழாவிட்டால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள்.

மனுதாரருக்கு ஏற்கனவே விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் குடும்ப வன்முறை தடுப்பு வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கு முழு ஊதியத்தை அரசு வழங்கவேண்டியது வரும்.

மனுதாரரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்கிறேன். அவருக்கு 15 நாட்களுக்குள் மீண்டும் வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Tags:    

Similar News