செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி

எனது கணவரை சுட்டுக்கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்- வில்சன் மனைவி பேட்டி

Published On 2020-01-16 12:24 GMT   |   Update On 2020-01-16 12:24 GMT
எனது கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட துக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. அவரை சுட்டுக்கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அவரது மனைவி கூறியுள்ளார்.

நாகர்கோவில்:

சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

எனது கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட துக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. அவரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற ஒரு நிகழ்வு தமிழகத்தில் நடக்கக்கூடாது.

எனது கணவர் பணியில் இருந்தபோது இன்னொரு காவலரும் பணியில் இருந்திருந்தால் இப்படி ஒரு துயரம் நடந்திருக்காது. எனது கணவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 2 மாதங்களுக்கு முன்பு ஜனவரி 1-ந்தேதி களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்தார். 4 நாட்கள் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பிறகு 3 நாட்கள் சோதனை சாவடி பணியில் ஈடுபட்டார். கொலை நடந்த 8-ந்தேதிதான் அந்த சோதனை சாவடிக்கு பணிக்கு சென்றார். பணி நேரத்திற்கு முன்பே பணிக்கு செல்ல வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர் எனது கணவர்.


இரவு 8 மணிக்குதான் சோதனை சாவடி பணிக்கு செல்ல வேண்டும். ஆனால் சம்பவத்தன்று 7.10 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருக்கு இப்படி ஒரு துயரம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

எனது மகள் தந்தையை தேடிக்கொண்டே இருக்கிறார். எனது குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி நிவாரணம் அளித்துள்ளது. எனது மூத்த மகளுக்கு அரசு வேலை தருவதாகவும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News