செய்திகள்
கைது

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் தங்கம் கடத்திய தமிழக வாலிபர் கைது

Published On 2019-11-08 05:21 GMT   |   Update On 2019-11-08 05:21 GMT
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த தமிழக வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையம் மூலம் அடிக்கடி தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் சில பயணிகள் நூதனமுறையில் தங்க கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அதிகாரிகளும் அவர்களை கண்காணித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனாலும் தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஏர்லங்கா விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அதில் ஒரு வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது பெயர் கோட்டை சாமி என்ற காளிமுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது உடலில் மாத்திரை வடிவில் தங்க கட்டிகளை மறைத்து கடத்தியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 350 கிராம் எடை உள்ள ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News