உள்ளூர் செய்திகள்
சுற்றுலா வாகனங்கள்

பொள்ளாச்சி அருகே அடிக்கடி பழுதாகும் டாப்சிலிப் சுற்றுலா வாகனங்கள்

Published On 2022-04-16 09:49 GMT   |   Update On 2022-04-16 09:49 GMT
சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல இருந்த இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்
பொள்ளாச்சி: 

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்சிலிப் மிகவும் புகழ்பெற்றது. டாப்சிலிப்பிற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

டாப்சிலிப்பில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி பெற்றது. யானைகள் முகமில் யானைகளுக்கு உணவு வழங்குவது, முகாமில் யானைகளின் விளையாட்டு போன்றவற்றை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

தங்கள் சொந்த வாகனங்களில் டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகள் யானைகள் முகாம் பகுதிக்கு வனத்துறையின் வாகனங்களிலேயே அழைத்து செல்லப்படுகிறார்கள்.

இதற்காக வனத்துறையில் 3 வேன்களும், 5 ஜீப்களும் உள்ளன. இந்த வாகனங்கள் மிகவும் பழைய வாகனங்கள் என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு பாதி வழியில் நின்று விடுகிறது. இதனால் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல இருந்த இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

வேனில் செல்வதற்கு ஒரு பயணிக்கு ரூ.250 கட்டணமமும், திறந்த வெளி ஜீப்பில் 8 நபர்களுக்கு ரூ.3 ஆயிரமும் வசூலிக்கப் படுகிறது. ஆனால் வாகனங்கள் மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே புதிய வாகனங்கள் வாங்கி சுற்றுலாவுக்கு பயன்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாப்சிலிப்பில் தங்குவதற்கு 30 தங்கும் அறைகள் உள்ளன. இதற்கு ரூ.2500 முதல் ரூ-.4 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இருந்தாலும் டாப்சிலிப்பில் அருகில் உள்ள பரம்பிக்குளம் தங்கும் விடுதிகளில் உள்ளது போன்று பராமரிப்பு இங்கு இல்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

கடந்த 3 நாட்களாக அரசு விடுமுறை என்பதால் தினசரி ஆயிரம் பேர் வரை டாப்சிலிப் வந்து செல்கின்றனர். டாப்சிலிப்பில் உள்ள 30 அறைகளும் பெரும்பாலும் ஆட்கள் தங்கி உள்ளனர். 

வனத்துறையினர் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யும் போது வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என்பது குறையா உள்ளது. இதனை வனத்துறையினர் ஆராய்ந்து சரி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News