செய்திகள்
மு.க.ஸ்டாலின்

நாமக்கல்லுக்கு 8-ந் தேதி மு.க.ஸ்டாலின் வருகை

Published On 2021-03-01 12:28 GMT   |   Update On 2021-03-01 12:28 GMT
நாமக்கல் மாவட்டத்திற்கு 8-ந் தேதி வருகை தரும் மு.க.ஸ்டாலின் பொம்மைகுட்டைமேடு பகுதியில் காலை 11 மணிக்கு பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.
நாமக்கல்:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். அந்த வகையில் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் மு.க.ஸ்டாலின் பொம்மைகுட்டைமேடு பகுதியில் காலை 11 மணிக்கு பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

இதற்காக நாமக்கல்- சேலம் நெடுஞ்சாலையில் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி பொம்மைகுட்டைமேடு பகுதியில் உள்ள லட்சுமி திருமண மண்டபம் அருகே பந்தல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் பந்தல் அமைக்கும் பணியை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுவை அளிக்கலாம். கோரிக்கை மனுக்கள் அனைத்தும் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களுக்குள் நிறைவேற்றி தரப்படும் என கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் துரை (எ) ராமசாமி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கவுதம், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கதிர்வேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, நாமக்கல் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News