செய்திகள்
அம்மா குடிதண்ணீர்

விரைவில் கிடைக்கும் கண்ணாடி குவளையில் ‘அம்மா’ குடிதண்ணீர்

Published On 2019-11-08 07:30 GMT   |   Update On 2019-11-08 07:30 GMT
‘அம்மா’ குடிதண்ணீர் 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், 750 எம்எல் தண்ணீரை கண்ணாடி குவளையில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டு அம்மா குடிநீர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இதற்காக கும்மிடிப்பூண்டியில் பெரிய தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அம்மா மினரல் வாட்டர் 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது.

பஸ் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் உள்பட நகரின் முக்கிய இடங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்தது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

பெட்டி பெட்டியாக குடிநீர் பாட்டில்கள் வந்தாலும் உடனே விற்பனையாகி விடும். அந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அம்மா குடிநீர் பாட்டில் விற்பனையில் சிறிது தொய்வு ஏற்பட்டது. உற்பத்தி சரிவர இல்லாததால் பல இடங்களில் குடிநீர் பாட்டில் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இப்போது அம்மா குடிநீர் பாட்டில் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.



இதன் ஒரு கட்டமாக கண்ணாடி குவளையில் அம்மா குடிதண்ணீரை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறியதாவது:-

அம்மா குடிநீர் பாட்டில் 1 லிட்டர் 10 ரூபாய்க்கு வழங்குவதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் இதை விட குறைந்த விலையில் குடிநீரை வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் வந்தது.

1 லிட்டர் பாட்டிலை வாங்குவோர் சிலர் குடிநீர் முழுவதையும் குடிக்காமல் மிச்சம் வைத்து விட்டு செல்வதால் அதிகளவில் பாட்டில்கள் தேங்கி வருகிறது.

எனவே இதை கருத்தில் கொண்டு 750 எம்.எல். அம்மா குடிநீர் பாட்டிலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த பாட்டில் தண்ணீரை 7 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யலாமா? என்று ஆலோசித்து வருகிறோம்.

புதிய கண்ணாடி பாட்டிலின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்படுவதுடன், தண்ணீர் வீணாவதையும் தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதற்காக புதிய இயந்திரம் வாங்குவதற்கான டெண்டர் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News