செய்திகள்
தீபஸ்ரீ ராய்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பெண் எம்.எல்.ஏ. விலகல்

Published On 2021-03-15 11:29 GMT   |   Update On 2021-03-15 11:29 GMT
திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. தீபஸ்ரீ ராய் இன்று அக்கட்சியில் இருந்து விலகினார். ராஜினாமா கடித்ததை கட்சி தலைமைக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
கொல்கத்தா:

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.


இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே மேற்குவங்க அரசியலில் உச்சபட்ச பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல தலைவர்களும் கட்சி மாறும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் பாஜக-வில் இணைந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் பாஜக-வை சேர்ந்தவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைகின்றனர். இது அம்மாநில அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

இதற்கிடையில், அம்மாநிலத்தின் ரைடிஹி தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்தவர் தீபஸ்ரீ ராய். நடிகையான இவர் 2011, 2016 ஆகிய இரண்டு தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் தீபஸ்ரீ ராய் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.     

இந்நிலையில், ரைடிஹி தொகுதி எம்.எல்.ஏ.வான தீபஸ்ரீ ராய் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகியதற்கான ராஜினாமா கடிதத்தை அக்கட்சி தலைமைக்கு அவர் அனுப்பியுள்ளார். தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் இம்முறை வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்த தீபஸ்ரீ ராய் இம்முடிவை எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய தீபஸ்ரீ ராய் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News